திருப்பூர்: “கட்டிமுடிக்கப்படாத ராமர் கோயிலுக்கு தேர்தலுக்காக குடமுழுக்கு நடத்தினார் மோடி. இறைவனை அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது என பல ஆன்மிகத் தலைவர்கள் நிராகரித்தனர். இந்துக்கள் பெயரை சொல்லி மோடி ஏமாற்றுகிறார்” என செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
‘இண்டியா’ கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து, திருப்பூர் ராயபுரத்தில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்துக்கும், சர்வாதிக்காரத்துக்குமான தேர்தல் ஆகும். 10 ஆண்டுகாலமாக எந்த பணியையும் பாஜக செய்யவில்லை. இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர்களும், மாநில தலைவர்களும் வாய் திறப்பதில்லை.
எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத மோடி, தமிழ்நாட்டில் வாக்கு சேகரிக்க தொடர்ந்து வருகிறார். ஜிஎஸ்டி என்ற அரக்கனால், இன்றைக்கு திருப்பூர் தொழில் முடிந்துவிட்டது. மோடியை வீழ்த்தினால் சர்வாதிகாரம் வீழ்த்தப்படும். ராகுல் பிரதமரானால் ஜனநாயகம் காப்பாற்றப்படும்.
கட்டிமுடிக்கப்படாத ராமர் கோயிலுக்கு தேர்தலுக்காக குடமுழுக்கு நடத்தினார் மோடி. இறைவனை அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது என பல ஆன்மீகத் தலைவர்கள் நிராகரித்தனர். இந்துக்கள் பெயரை சொல்லி மோடி ஏமாற்றுகிறார்.
திருவாடுதுறை ஆதினத்தை மிரட்டி ரூ.10 கோடி கேட்டது பாஜக. இதில் யார் இந்து என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். மக்கள் சண்டை போட்டால், அதன் மூலம் கிடைக்கும் வாக்கு வங்கியை, அதானியிடம் கொண்டு போய் சேர்க்கிறார் மோடி” என்றார்.
இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் செல்வப்பெருந்தகை கூறும்போது, “பாஜகவில் இணைந்தவர்களின் குற்ற வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறையை வைத்து மிரட்டி பணிய வைத்து பாஜகவுக்கு ஆதரவு திரட்டுவது நாட்டில் என்ன ஜனநாயகம்? தொழிலதிபர்களை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மற்றும் சிபிஐயை அனுப்பி மிரட்டி தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெற்ற பிறகு, வழக்குகள் திரும்ப பெறப்படுகிறது.
தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்கு நிதி தராதவர்கள், இன்றைக்கு வாக்குகள் கேட்டு வருகிறார் பிரதமர் மோடி. அருணாச்சலபிரதேசத்தில் உள்ள இடங்கள் சீனா ஆக்கிரமித்துள்ளது. இதனை பற்றி வாய் திறக்கவில்லை மோடி. சீனாவின் தூதராக மோடி செயல்படுகிறார் என அந்த கட்சியை சேர்ந்த சுப்பிரமணியசாமியே சொல்கிறார். கச்சத்தீவு விஷயத்தில் உண்மைக்கு புறம்பாக பாஜக பொய் பேசுகிறது. வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் ராகுல்காந்தி பிரச்சாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு வருகிறார்” என்றார்.
+ There are no comments
Add yours