“பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்துக் கொண்டு நாடகமாடுகிறார் எடப்பாடி பழனிசாமி. அவரது நாடகம் ஒருபோதும் தமிழக மக்களிடையே எடுபடாது” என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடலூர், விழுப்புரம் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பொதுக்கூட்ட மேடையில் மக்களிடையே பேசிய அவர், “100 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல பாஜக தீட்டியிருக்கும் திட்டங்களுக்கு தடை போடும் அறிக்கையாக காங்கிரஸின் தேர்தல் அறிக்கை உள்ளது. நாட்டை படுகுழியில் தள்ளிய பாஜகவிடம் இருந்து மீட்கும் அறிக்கையாகவும் உள்ளது. திமுக வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கிய அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. நீட் விலக்கு, சாதி வாரி கணக்கெடுப்பு, கல்விக்கடன்கள் தள்ளுபடி ஆகிய வாக்குறுதிகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளன.
மக்களவைத் தேர்தலில் வென்று இந்தியா கூட்டணி அமைக்கும் அரசு சமூக நீதி அரசாக இருக்கும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும். இந்த விழுப்புரம் தொகுதி பிரச்சினையான, முந்திரி ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய ஏற்றுமதி ஊக்கத்தொகை 5 சதவீதம் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரம் காட்பாடி இடையே இருவழி ரயில் பாதை அமைக்கப்படும். தேஜஸ் விரைவு ரயில் விழுப்புரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இடஒதுக்கீடு முறை இருக்காது. சமூகநீதிக்கு சவக்குழி தோண்டிவிடுவார்கள். இந்த தேர்தல் 2வது விடுதலை போராட்டம். இது இந்திய ஜனநாயகத்தை மீட்கும் தேர்தல். ஏனென்றால் நாடு தற்போது மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை என கூறும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது பாமக. பாஜக, பாம கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று ராமதாஸ்க்கு மட்டும் அல்ல. அனைவருக்கும் தெரியும்.
ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டை மட்டுமல்ல, அதிமுகவையும், தமிழ்நாட்டின் உரிமைகளையும் சேர்த்து அடகு வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. அவரது தலைமையிலான ஆட்சிதான், தமிழ்நாட்டின் இருண்ட காலம். அரசு நிர்வாகம் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் அதிமுக ஆட்சி. தற்போது பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்துக் கொண்டு நாடகமாடுகிறார் எடப்பாடி பழனிசாமி. அவரது நாடகம் ஒருபோதும் எடுபடாது. மக்களுக்கு தேவையான நேரத்தில் உதவி செய்வோரைத்தான் மக்கள் நினைத்துப் பார்ப்பார்கள். தமிழக மக்களுக்கு எதிரான போக்கை கடைபிடித்து வரும் பாஜக, எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் தமிழ்நாட்டை கைப்பற்ற முடியாது” என்று தெரிவித்தார்.
+ There are no comments
Add yours