பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு மக்கள் நல திட்டத்துக்கு தேவையான நிதியை நிறுத்தியுள்ளதாக மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இண்டியா கூட்டணியின் கூட்டம் மற்றும் பிரதமர் மோடியை சந்திக்கும் வகையில் தற்போது அவர் டெல்லி வந்துள்ளார்.
“டிசம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ள இண்டியா கூட்டணி கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன். தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் பிரதமர் மோடியை எங்கள் கட்சியின் எம்.பி-க்களுடன் நான் சந்திக்க உள்ளேன். மத்திய அரசு மேற்கு வங்க மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளது. அதை விடுவிக்கும் எண்ணமும் அவர்களுக்கு இல்லை. பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்கான நிதி இதில் அடங்கும்.
முக்கியமாக மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதி கூட வழங்கப்படாமல் உள்ளது. இதற்கான நிதியை மாநில மற்றும் மத்திய அரசு பகிர்ந்து கொள்கின்றன. எங்கள் மாநிலத்தில் இருந்து மத்திய அரசு வசூலிக்கும் வரிகள் தான் எங்களது பங்கு. சுகாதார துறைக்கான நிதி கூட நிறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், அதற்கு நாங்கள் காவி நிறத்தை பூச வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். மெட்ரோ நிலையங்களில் இதை செய்துள்ளனர். சிலிகுரியில் சில வீடுகளுக்கு காவி நிறம் பூசப்பட்டுள்ளது. அதையே சுகாதார மைய கட்டிடங்களுக்கும் செய்ய விரும்புகிறார்கள்.
நாங்கள் ஏன் அதை செய்ய வேண்டும். வெள்ளை மற்றும் நீலம் என இரண்டு வண்ணங்களை அரசின் வண்ணமாக மாநிலம் கொண்டுள்ளது. இது எங்கள் கட்சியின் நிறம் அல்ல. அனைத்து இடங்களிலும் பாஜகவின் சின்னத்தை இடம்பெற செய்வது மற்றும் காவி நிறம் பூசுவது நியாயமான செயலா. திட்டம் சார்ந்த நெறிமுறைகளை தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இப்படியாக பல விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் நாங்கள் பேச உள்ளோம்” என மம்தா தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours