காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் இடங்களில் போட்டியிட கமல் ஹாசனுக்கு சீட்டு ஒதுக்கப்படும் நெருக்கடி நேர்ந்துள்ளதால் மக்கள் நீதி மய்யம் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி பங்கீடு தொடர்பாக திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விசிக, காங்கிரஸ், மதிமுக கட்சிகளுக்கு கிட்டத்தட்ட கூட்டணி பங்கீட்டில் முடிவு எட்டப்பட்டுள்ளது. உரிய தொகுதிக்கான பேச்சுவார்த்தை மட்டுமே இழுபறியில் உள்ளது. இதனிடையே இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் இதுவரையில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறவே இல்லை. அதிகாரபூர்வமாக கூட்டணியும் உறுதி செய்யப்படவில்லை.
மக்களவைத் தேர்தலுக்கான சீட்டு ஒதுக்கீட்டில் எழும் இழுபறியே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் சார்பில் எம்பி-யாக விரும்பும் கமல் ஹாசனுக்காக ஒரு சீட்டேனும் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனால் திமுக தலைமையின் கறார் காரணமாக பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இதனால் கூட்டணி குறித்தும் அதிகாரபூர்வமாக அறிவிக்காது காலம் தாழ்த்தி வருகிறார் கமல்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் கணிசமான தொகுதிகள் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்குகிறோம்; மக்களவைத் தேர்தலுக்கு இயலாது’ என்பதே திமுக தரப்பின் இறுதி முடிவாக இருக்கிறது. திமுக சார்பு நிலையை எடுத்த பின்னர் வேறு அணிக்குத் தாவுவது தனது அரசியல் இருப்பை கேலிக்கு உள்ளாக்கும் என்பதால் கமல் இருதலைக் கொள்ளியாய் தவித்து வருகிறார். இதனையடுத்து காங்கிரஸ் தலைமையுடனான தனது டெல்லி செல்வாக்கு மூலமாக கமல் காய் நகர்த்தினார்.
ஆனால் காங்கிரஸ் தலைமை எடுத்துச் சொல்லியும் திமுக இறங்குவதாக இல்லை. கூட்டணி ஒதுக்கீட்டில் காங்கிரஸ் நிலைமையே அதிருப்தியில் தொக்கி நிற்பதால் கமலுக்கான சிபாரிசு எடுபடவும் வாய்ப்பில்லை. இதற்கிடையே தமிழகத்தில் தங்களுக்கான வெற்றி வேட்பாளர்களை தேடத் தொடங்கியிருக்கும் மாநில காங்கிரஸ், கமல் ஹாசனை காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட தூண்டில் போட்டுள்ளது.
இதன் மூலம் உள் ஒதுக்கீடாக காங்கிரஸ் சீட்டுகளில் ஒன்று கமலுக்கு கிடைக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பிரச்சார களத்தில் கமல் மூலம் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும். ஆனால் தற்போதுதான் டார்ச் லைட் சின்னத்தை மீண்டும் உறுதி செய்திருக்கும் மநீம, இந்த ஏற்பாடுக்கு தயங்கி வருகிறது.
விரைவில் கட்சியை காங்கிரஸில் கரைக்கும் யோசனையும் கமலுக்கு உண்டு என்பதால், அவர் கை சின்னத்தில் நிற்க உடன்படுவார் என்று காங்கிரஸ் கட்சியும் காத்திருக்கிறது
+ There are no comments
Add yours