வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கிற அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு என்ன தண்டனை என்கிற விவரம் இன்று காலை 10:30 மணிக்கு அறிவிக்கப்படுகிறது.
1996 – 2001 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்து, இதுதொடர்பாக பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்தார்.
அனைத்து தரப்பிலான வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நவம்பர் 27 ம் தேதி எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பானது தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் கடந்த 19 ம் தேதியன்று தீர்ப்பளித்தார்.
அந்த தீர்ப்பில், கீழமை நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்று ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொன்முடி வழக்கில் தண்டனை அறிவிப்பதற்காக இன்று காலை 10.30க்கு வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு 2வது வழக்காக அமைச்சர் பொன்முடி வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இருவரும் நேரிலோ காணொலியிலோ ஆஜராகும் பட்சத்தில் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.
ஏற்கெனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் கைதாகி சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், தற்போது மற்றொரு அமைச்சரும் தண்டனைக்குள்ளாவது திமுகவினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours