வருகிற ஜனவரி 23ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் திமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணையக்கூடும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இதை ஆமோதிக்கும் வகையில் பல்வேறு இடங்களிலும் திமுக சார்பில் நடத்தப்பட்ட கூட்டங்களில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டிருந்தார். தற்போதைக்கு திமுக கூட்டணியில் திமுக, காங்கிரஸ், ஆகிய கட்சிகள் தேர்தல் குழுக்களை அறிவித்துள்ளன.
விரைவில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளும் திமுக கூட்டணியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனால் 2019ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி பங்கீட்டின் அடிப்படையிலேயே இந்த தேர்தலும் எதிர்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் இணைவது மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக வருகிற 23ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசன் தலைமையில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில் திமுக கூட்டணியில் இடம்பெறுவது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours