மக்களவைத் தேர்தல் குழுவும், கட்சி தலைமையும் சொன்னால் தேர்தலில் போட்டியிடுவேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழக பாஜக தீவிரம் காட்டத்தொடங்கியுள்ளது. இன்று காலை தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டு, தேர்தல் மேலாண்மை குழுக்களும் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 2024 மக்களவைத் தேர்தலுக்காகத் தமிழகத்திற்குக் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்தன் மேனன் மற்றும் பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி ஆகியோரை பொறுப்பாளர்களாகக் கட்சித் தலைமை நியமித்துள்ளதாகத் தெரிவித்தார்.
அவர்கள் இருவரையும் செய்தியாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த அண்ணாமலை, “ இவர்கள் இருவரும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றிய நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர்கள். என் மண், என் மக்கள் யாத்திரை வரும் 11ம் தேதி சென்னையை வந்தடையும். அதனை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளது. அதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொள்ள உள்ளார்” என்று தெரிவித்தார்.
மேலும், “ என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி பிப்ரவரி 25ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும். இதனை முன்னிட்டு பிரம்மாண்டமாக நடைபெற உள்ள கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக இந்த பிரம்மாண்ட கூட்டத்திற்காக 5 லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது. 10 லட்சம் பாஜக தொண்டர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதற்காக 500 ஏக்கர் மைதானம் தயாராகி வருகிறது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அண்ணாமலை, “வேட்பாளர்கள் குறித்த இறுதி முடிவை, மேலிடம் தான் எடுக்கும். கட்சி மேலிடம் என்னை போட்டியிடச் சொன்னால் போட்டியிடுவேன். தேர்தல் பணிகளைச் செய்யச் சொன்னால் அதைச் செய்வேன். எல்லோருக்கும் பணி கொடுக்கப்பட்டுள்ளது, எனவே சொல்லும் வேலையைச் செய்வோம். கூட்டணி குறித்து இன்னும் முடிவாகவில்லை, அதற்கு நேரம் உள்ளது.
இம்மாத இறுதியில் தமிழகத்தில் பாஜக கூட்டணி குறித்த முழு விவரம் தெரியவரும். 39 தொகுதியிலும் முதல் இடம் பெறவே உழைத்து வருகிறோம். பங்காளிகள் எங்களைப் பகையாளியாக நினைத்தால் நாங்கள் பொறுப்பல்ல. ஜி.கே.வாசன் எங்களிடம் கூட்டணி குறித்துப் பேசி வருகிறார், எங்கள் கூட்டங்களின் பங்கேற்று வருகிறார். பரஸ்பர நட்புக்காகப் பல கட்சிகளுடன் பேசி வருகிறார். யாரையும் நாம் தடுக்க முடியாது” எனவும் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours