தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டியை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்துள்ளது.
தெலங்கானா மாநில சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் 30-ம் தேதி நடந்த தேர்தலில், 119 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, காங்கிரஸ் மாநில கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டிதான் அடுத்த தெலங்கானா மாநில முதல்வர் என கூறப்பட்டது. ஆனால், காங்கிரஸில் முதல்வர் பதவிக்கு மூத்த தலைவர்கள் பலர் போட்டியிட்டனர். இதையடுத்து, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை காங்கிரஸ் மேலிடம் தெலங்கானாவுக்கு அனுப்பிவைத்தது. அவர், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் யார் என்பதை முடிவு செய்ய ஒரு கூட்டத்தை நடத்தினார். பின்னர், திங்கட்கிழமை இரவு டெல்லிக்கு சென்று நடந்த விவரங்களை கட்சி மேலிடத்துக்கு எடுத்துக் கூறினார்.
டெல்லியில் ஆலோசனை: இது தொடர்பாக காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், சோனியா காந்தி, ராகுல்காந்தி, டி.கே சிவக்குமார் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். பின்னர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளர் கேசி. வேணுகோபால் வீட்டிலும் இந்த பிரச்சனை குறித்து நேற்று மாலை ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன் பின்னர், நேற்றிரவு வேணுகோபால் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டியை முதல்வராக அறிவிக்கிறேன். அவர் 7-ம் தேதி பதவியேற்பார். மற்ற விவரங்கள் நாளை (இன்று) வெளியிடப்படும். இவ்வாறு வேணுகோபால் கூறினார்.
+ There are no comments
Add yours