பாஜக மாநில தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை மீது தேர்தல் விதிகளை மீறியதாக பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதையடுத்து அண்ணாமலை மற்றும் கூட்டணி கட்சியினர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை பீளமேடு பகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஆனால், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். இரவு 10.40 மணியளவில் அவர் ஏராளமான தொண்டர்களுடன் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் பேரணியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனை எதிர்க்கட்சிகள் தட்டிக் கேட்டதால், அவர்கள் மீது பாஜகவினர் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 7 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட 5 பேர் மீது பீளமேடு போலீஸார், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் கோவை பீளமேடு போலீஸார், பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
+ There are no comments
Add yours