தனது சகோதரர், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு ரூ.5 கோடி நன்கொடை அளித்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி. தன்னுடைய சொந்த செலவில் இருந்து மக்களுக்கு உதவி செய்யும் பவன் கல்யாணின் கட்சிக்குத் தானும் உதவி செய்துள்ளது மகிழ்ச்சி எனவும் இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் நாடு முழுவதும் கட்சிகளுக்கான பிரச்சாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் ஆந்திரப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் மே 13ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில் 175 இடங்கள் உள்ளது. ஒரு கட்சி வெற்றி பெற வேண்டுமானால், ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 88 இடங்களையாவது பெற வேண்டும். இதற்கிடையில், தேர்தலுக்கு முன்னதாக, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனது சகோதரர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சிக்கு ரூ. 5 கோடி நிதி கொடுத்துள்ளார்.
இந்தப் புகைப்படங்களைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சிரஞ்சீவி, ‘ஆட்சிக்கு வந்த பிறகு உதவுவோம் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அதிகாரம் இல்லாவிட்டாலும், பவன் கல்யாண் தனது சம்பாத்தியத்தை விவசாயிகளின் நலனுக்குப் பயன்படுத்துகிறார். அது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். சமுதாயத்திற்காக தன் செல்வத்தைச் செலவிடும் மனம் படைத்த எனது தம்பி பவன் கல்யாணுக்காக நானும் ஜனசேனாவுக்கு நன்கொடை அளித்தேன்’ எனக் கூறியுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறார் பவன் கல்யாண். சிரஞ்சீவியின் ‘விஸ்வாம்பரா’ படப்பிடிப்புத் தளத்தில் அவரை பவன் கல்யாண் சந்தித்தபோது தான் இது நடந்திருக்கிறது
+ There are no comments
Add yours