நாம் வாழ்வது தமிழகமா அல்லது போதைப் பொருள் மொத்த விற்பனைக் கிடங்கா? தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழித்தெழுந்து, தொடர் நடவடிக்கைகள் எடுத்து போதைப் பொருள் புழக்கத்தை ஒழிக்க முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் இரு இடங்களில் இன்று ஒரே நாளில் 180 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை சென்னை, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பல கோடிகள் மதிப்புமிக்க போதை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது பெருத்த அதிர்ச்சியை அளிக்கிறது.
ரயில் கூப்பைகள் முதல் கார்ப்பரேஷன் குப்பைகள் வரை எங்கு காணினும் போதைப்பொருட்களே நீக்கமற நிறைந்துள்ளன. நாம் வாழ்வது தமிழகமா அல்லது போதைப் பொருள் மொத்த விற்பனைக் கிடங்கா? தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழித்தெழுந்து, தொடர் நடவடிக்கைகள் எடுத்து போதை பொருள் புழக்கத்தை ஒழிக்க முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.
இனி தமிழகத்தில் போதை பொருள் அறவே ஒழிக்கும் வரை நாங்கள் விடுவதாக இல்லை. காவல் துறையும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் களமிறங்கி, மாவட்டந்தோறும் சோதனைகள் நடத்தி, தமிழகத்தில் பரவியுள்ள ஒட்டுமொத்த போதைப் பொருளையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
இந்த போதைப் பொருட்களை புழக்குவோர் யாராக இருப்பினும், எவ்வித பாகுபாடும் இன்றி கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, தமிழகத்தை போதைப் பொருள் அறவும் அற்ற மாநிலமாக மாற்றவேண்டுமென்று வலியுறுத்துகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்
+ There are no comments
Add yours