சென்னை: ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு, ஓபிஎஸ் பெயரில் சுயேச்சையாக போட்டியிடும் 4 வேட்பாளர்கள் மற்றும் எம்.பன்னீர்செல்வம் என்ற பெயரில் போட்டியிடும் ஒரு சுயேச்சை வேட்பாளரின் மனுவும் ஏற்கப்பட்டது. சேலம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி மற்றும் தேனி தொகுதி அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் ஆகியோரது வேட்புமனுக்கள் நீண்ட இழுபறிக்குப் பின் ஏற்கப்பட்டன.
2024 மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கி மார்ச் 27-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுக்கள் மீதான பரசீலனை இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
மத்திய சென்னையில், திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்கப்ட்டன.
ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் டி.ஆர்.பாலு மற்றும் அதிமுக நாம் தமிழர் கட்சி, தமாகா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்பட 32 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன், தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் சவுமியா அன்புமணி மற்றும் திமுக, அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
பன்னீர்செல்வங்கள் மனுக்கள் ஏற்பு: ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில், அவரது பெயர் கொண்ட 5 சுயேச்சை வேட்பாளர்கள் அந்தத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அந்த 5 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
செல்வகணபதி மனு ஏற்பு: சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி போட்டியிடுகிறார். ஆனால், அவருக்கு இரண்டு இடங்களில் வாக்களிக்கும் உரிமை இருந்ததாக குற்றச்சாட்டு இருந்தது. இதனால், வேட்புமனு பரிசீலனை நாளான இன்று அவரது மனு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் அவரது மனு ஏற்கப்பட்டது.
டிடிவி தினகரன் மனு ஏற்பு: தேனியில் பாஜக கூட்டணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இவரது வேட்புமனுவில் அன்னிய செலாவணி வழக்கு உள்ளிடட விபரங்களைத் தெரிவிக்கவில்லை எனக் கூறி குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அவரது வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பின்னர், அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது.
+ There are no comments
Add yours