‘தென்னிந்தியாவில் பாஜக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை உறுதி செய்யும்; தென்னிந்திய மக்கள் நிச்சயம் பிரதமர் மோடிக்கு வாக்களிப்பார்கள்’ என பெங்களூரு தெற்கு எம்பி தேஜஸ்வி சூர்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் பாஜகவைப் பொறுத்தளவில், வடக்கு – தெற்கு என பிரித்து பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. வட இந்தியாவில், இந்தி பேசும் மாநிலங்கள் பாஜகவுக்கு பெருவாரியாக வாக்களிக்கும் சூழல் நிலவுகிறது. ராமர் கோயில் உட்பட பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதன் மூலம் அங்கே வாக்காளர்களை திடமாக வசீகரித்து இருப்பதாக பாஜக பெருமிதம் கொண்டிருக்கிறது.
2014 முதல் 2024 வரையிலான 10 ஆண்டுகள் ஆட்சியில், ஆளும்கட்சிக்கு வழக்கமாக எழும் அதிருப்தி ஓட்டுகளை, இந்த வகையில் இந்தி பேசும் வட இந்திய மாநிலங்களில் பாஜக காணடிக்கச் செய்திருக்கிறது. இந்த மாநிலங்களில் பெருவாரியாக வெல்வதன் வாயிலாக பாஜக தனது இலக்கை நிலைநிறுத்திக்கொள்ளவும் உத்தேசித்துள்ளது. மாறாக ஒருங்கிணைந்த ஆந்திரா, கர்நாடக, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவில், மக்களவைத் தேர்தல் களம் கடும் சவாலாகும் என பாஜக அஞ்சுகிறது.
ஆனால், வடக்கைப் போலவே தென்னிந்திய வாக்காளர்களும் மோடிக்கு பெருவாரியாக வாக்களிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் தேஜஸ்வி சூர்யா. “தென்னிந்திய வாக்காளர்கள் இந்த முறை பிரதமர் மோடி மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வாக்களிக்க காத்திருக்கிறார்கள். இதன் மூலம் தெற்கே பாஜக வரலாற்று சாதனையை படைக்கும்” எனவும் தேஜஸ்வி சூர்யா இன்று உறுதி தெரிவித்தார்.
”கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். தென்னிந்தியாவுக்கு பிரதமர் மோடி பெரும் மாற்றத்தினை அளித்துள்ளார். மக்கள் அதனை நன்கு உணர்கிறார்கள். பாஜக வேட்பாளர்கள் மீதும் மக்கள் வித்தியாசத்தை உணர்கிறார்கள். இந்த நுணுக்கமான அரசியலை அடையாளம் உணர பாஜகவுக்கு விளம்பரம் தேவையில்லை” எனவும் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours