மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டிய தீபஒளி திருநாளில், போதையின் ஆதிக்கம் காரணமாக 20 உயிர்கள் பலியாகியிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், போதையை ஒழிக்காமல் புதிய விடியல் பிறக்காது என திமுகவை எச்சரித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துக்களில் திமுக கவுன்சிலர், அவரது 6 மாத குழந்தை உட்பட 20க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசின் மது கொள்கையே இந்த விபத்துக்களுக்கு காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டிய தீபஒளி திருநாளில், போதையின் ஆதிக்கம் காரணமாக 20 உயிர்கள் பலியாகியிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. சென்னையில் நடந்த விபத்து உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு மது மற்றும் கஞ்சா போதை தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிர்க்கொல்லி மதுவையும், கஞ்சாவையும் ஒழிக்க வேண்டும் என்பதற்கு இதைவிட வலிமையான காரணங்கள் இருக்க முடியாது. மற்றொருபுறம், தீபஒளி திருநாள் மற்றும் அதற்கு முந்தைய இரு நாள்களில் மட்டும் தமிழ்நாட்டில் ரூ.633 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்படி கடந்த 10-ஆம் நாள் வழங்கப்பட்ட 1138 கோடியில் பாதிக்கும் அதிகமாகும்.
+ There are no comments
Add yours