மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் சமக கூட்டணி!

Spread the love

சென்னை: வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பாஜகவின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் பிப்ரவரி 28-ம் தேதி என்னை நேரில் சந்தித்து, மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைப்பது குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில் ஒருமித்த கருத்துகள் உடன்பட்டதால் நேற்று (05.03.2024) மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக தமிழக பொறுப்பாளர் அரவிந்த்மேனன் ஆகிய மூவரும் குழுவாக வந்து என்னை சந்தித்து கூட்டணி குறித்து மீண்டும் பேசினார்கள். இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தேறியது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஏற்கெனவே எனக்கு மக்களவைத் தேர்தலில் முடிவெடுக்கும் அதிகாரத்தினை வழங்கி, எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று உத்தரவாதம் அளித்தது.

அதன் அடிப்படையில், நாடு வளம் பெற, ஒற்றுமையுணர்வு ஓங்கிட, மீண்டும் நல்லாட்சி அமைந்திட மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பாரத பிரதமராக தேர்ந்தெடுக்க பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன். மற்ற விபரங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக உடனும் சரத்குமார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுகவுடன் 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளார் சரத்குமார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours