மக்களவைத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் – திருமாவளவன்!

Spread the love

“மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கும் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் இடையே நடைபெறும் போர். இரண்டாம் சுதந்திரப் போரான வரும் தேர்தலில் மக்கள் வெல்வார்கள். மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பாஜக பட்டியல் பிரிவு தலைவர் தடா பெரியசாமி, பாஜகவில் இருந்து விலகி இன்று அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், “புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், சமூக நீதிக்கும், பட்டியலின மக்களுக்கும் பாஜக எதிரானது என்று கடந்த 10 ஆண்டுகளாக பேசி வருகிறேன். தற்போது இதை உணர்ந்து பாஜக பட்டியல் பிரிவு மாநில தலைவர் தடா பெரியசாமி, பாஜகவில் இருந்து விலகியது மனதுக்கு ஆறுதலை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “மொழி உணர்வு, இன உணர்வை கொச்சைப்படுத்தி தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். கர்நாடகாவில் ஐபிஎஸ் ஆக இருந்தபோது, எனக்கு தமிழ் நாடு பிடிக்காது. கர்நாடகாதான் பிடிக்கும் என்று பேசினார். இதுபோன்று தொடர்ந்து அவர், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக் கொண்டிருக்கிறார். அது அவருக்கு தனிப்பட்ட முறையில் விளம்பரத்தை தேடித் தருமே தவிர, கட்சிக்கு எந்த பயனையும் தராது.

மத்திய அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது. பாஜக நிரந்தர ஆட்சியை தரப்போவதில்லை. ஆட்சி மாற்றம் நடந்தே தீரும். அதனால், தேர்தல் ஆணையம் இதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தைபோல ஜனநாயகத்தை காப்பாற்றக்கூடிய உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு தேர்தல் ஆணையம். அந்த தேர்தல் ஆணையமே நேர்மை தவறி நடந்தால், இந்த நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றவே முடியாது. பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவது, வெளிப்படையாக சாதாரண மக்கள் கூட புரிந்துக் கொள்ளும் வகையில் உள்ளது. இந்த போக்கு கைவிடப்பட வேண்டும்.

பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னம் ஒதுக்கி ஆணை பிறப்பிக்கப்படுகிறது. பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்க மறுத்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் எங்களை தவிர வேறு யாரும் பானை சின்னம் கேட்கவில்லை. பானை சின்னம் நிச்சயமாக விசிகவிற்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிதம்பரம் பகுதியில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த தேர்தல் பாஜகவுக்கும் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் இடையே நடைபெறும் போர். இரண்டாம் சுதந்திரப் போரான வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வெல்வார்கள். மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours