மக்களவைத் தேர்தல் அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை சீமான் இன்று அறிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்திற்கு மார்ச் அல்லது ஏப்ரலில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் இறங்கியுள்ளது. மாநில தேர்தல் ஆணையர்களுடன் ஆலோசனைகள் நடந்து வருகிறது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும் இந்த தேர்தலை சந்திக்கும் உத்திகளையும், கூட்டணியையும் இறுதி செய்து வருகின்றன.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை திமுக கூட்டணியில் பெரிதான எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு அமைத்த கூட்டணியை வைத்தே நாடாளுமன்ற தேர்தலையும் திமுக எதிர்கொள்கிறது. பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள அதிமுக தன்னுடன் கூட்டணிக்கு பல சிறு கட்சிகளையும் ஒன்றிணைத்து வருகிறது. தமிழ்நாட்டில் 11 தொகுதிகளை குறிவைத்து மத்தியில் ஆளும் பாஜக வேலை செய்து வருகிறது.
இந்நிலையில் தனது கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் இன்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் தென் சென்னை தொகுதிக்கான வேட்பாளராக தமிழ்ச்செல்வி என்பவரை அறிவித்திருக்கிறார். அத்துடன் இனி ஒவ்வொரு தொகுதிக்கான வேட்பாளரையும் அடுத்தடுத்து அவர் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் பெரிய கட்சிகள் இன்னும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றை உறுதி செய்யாமல் உள்ள நிலையில் முதல் ஆளாக களத்தில் இறங்கி வேட்பாளரையும் அறிவித்திருக்கிறார் சீமான்.
+ There are no comments
Add yours