மக்களவைத் தேர்தலில் மதுரையில் சு.வெங்கடேசனும், திண்டுக்கல்லில் சச்சிதானந்தமும் போட்டியிடுவார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மற்றும் திண்டுக்கல்லில் அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை மதுரை மற்றும் கோவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை கோவைக்கு மாற்றாக திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இரண்டு தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பணிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. இது தொடர்பாக இன்று சென்னையில் அக்கட்சியின் மாநில அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், 2 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார்.
அதன்படி, மதுரை மக்களவைத் தொகுதியில் தற்போது எம்பி-யாக உள்ள சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் தொகுதியில் அக்கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours