மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் கர்நாடகா எம்எல்ஏக்கள், எம்.பி-க்கள் போராட்டம்!

Spread the love

மத்திய அரசைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் வரிப் பகிர்வு கொள்கைகளுக்கு எதிராக கர்நாடகா எம்எல்ஏக்கள், எம்.பி-க்கள் புது டெல்லியில் பிப்ரவரி 7-ம் தேதி போராட்டம் நடத்துவார்கள் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

அதன்படி, கர்நாடக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இன்று காலை திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தின்போது, “வரிப் பகிர்வு, மானிய உதவி ஆகியவற்றில் கர்நாடகத்துக்கு மத்திய அரசு அநீதி இழைத்துள்ளது” என அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் முதல்வர் சித்தராமையா கூறுகையில், “கர்நாடகா மற்றும் பிற தென் மாநிலங்களுக்கு எதிராக மத்திய அரசு கடைப்பிடித்து வரும் பாகுபாடு பற்றிய பிரச்சினையை நாங்கள் எழுப்புகிறோம். இது எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் எதிரானது அல்ல. இது கன்னடர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதற்காக மட்டுமே.

வரி விநியோகத்தில் மத்திய அரசு நியாயமற்று நடந்து கொண்டுள்ளது. 5 அல்லது 6 ஆண்டுகளில் கர்நாடகாவுக்கு வர வேண்டிய ரூ.1.87 லட்சம் கோடி இன்னும் வரவில்லை. 14வது நிதிக் குழுவில் எங்களது வரிப் பங்கு 4.71 சதவீதமாக இருந்தது. 15வது நிதிக் குழுவில் இது 3.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக 24 சதவீத பற்றாக்குறை அதாவது 62,92,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.

இதற்கிடையே கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக பெங்களூரு விதான் சவுதாவில் உள்ள காந்தி சிலை அருகே பாஜக தலைவர்கள், தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours