பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதலால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இது பாஜகவுக்கு பெரும் பேரிடியாக அமைந்தது. தமிழகத்தில் கணிசமான இடங்களில் பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்த பாஜகவுக்கு, அதிமுக விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், தேர்தல் நெருங்கும்போது பாஜக – அதிமுக கூட்டணி மீண்டும் உருவாகும் என அரசியல் கட்சிகள் விமர்சித்தது.
ஆனால், இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது, தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கூட்டணியில் இருந்து விலகியுள்ளேம் என அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியே திட்டவட்டமாக தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல், அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைத்து வரும் தேர்தலில் களமிறங்கி மக்கள் நலனுக்காக குரல் கொடுப்போம் என கூறினர். கூட்டணி முறிவு குறித்து பாஜக மாநில தலைவர் கூறுகையில், கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும், அது அவர்கள் விருப்பம்.
எனவே கூட்டணி குறித்து தலைமைதான் முடிவு எடுக்கும், என்னுடைய கருத்தை ஆழமாக கூறிவிட்டேன் என்றார். கூட்டணி முறிவிற்கு பிறகு நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதிமுக தலைமையில் தான் கூட்டணி என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக கூறியுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுக 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றிய இபிஎஸ், நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறாது, திமுக கூட்டணி தோல்வி அடைவது உறுதி. இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு அதிமுக ஆட்சிதான் காரணம். அதிமுக ஆட்சியில்தான் ஒடுக்கப்பட்ட, அடித்தள மக்களுக்கு திட்டங்கள் சென்றது.
ஆனால், திமுக அரசும், முதல்வர் ஸ்டாலினும் மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை முடக்கிவிட்டனர். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும், கல்விக் கடனை ரத்து செய்வதாகவும் வாக்குறுதி கொடுத்தனர். இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதற்கு பதிலாக மின் கட்டணம், சொத்து வரி, பால் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்துவிட்டது.
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தனர். ஆனால், திமுகவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உரிமையைத் தொகையை கொடுத்து வருகின்றனர். இதுபோன்ற பிரச்சினைகளை திசை திருப்ப தான் சனாதனத்தை கையில் எடுத்துள்ளனர் என குற்றச்சாட்டியுள்ளார். எந்த தேசிய கட்சிகள் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் தமிழக மக்களவை வஞ்சிக்கின்றனர்.
மேலும், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால், ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. எங்களை கேட்கும் முதல்வர் ஸ்டாலின், இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்வரா? என கேள்வி எழுப்பினார். எனவே, அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமைக்கப்பட்டு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என உறுதிபட எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
+ There are no comments
Add yours