ம.பி, ராஜஸ்தானில் பாஜக ஆதிக்கம் !

Spread the love

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தெலங்கானா முடிவுகள் / முன்னிலை நிலவரம்
பெரும்பான்மைக்கு 60
கட்சிகள் முன்னிலை நிலவரம்
காங்கிரஸ் 65
பிஆர்எஸ் 41
பாஜக 8
பிற 5

ம.பி முடிவுகள் / முன்னிலை நிலவரம் | பெரும்பான்மைக்கு 116
காங்கிரஸ் – 77
பாஜக – 152
இதர கட்சிகள் – 1

ராஜஸ்தான் முடிவுகள் / முன்னிலை நிலவரம்
பெரும்பான்மைக்கு 100
கட்சிகள் முன்னிலை நிலவரம்
காங்கிரஸ் 74
பாஜக 108
இதர கட்சிகள் 17

சத்தீஸ்கர் முடிவுகள் / முன்னிலை நிலவரம் | பெரும்பான்மைக்கு 46:
காங்கிரஸ் – 48
பாஜக – 42
இதர கட்சிகள் – 0

களைகட்டிய தேர்தல் திருவிழா: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 9-ம் தேதி அறிவித்தது. 5 மாநிலங்களிலும் நவம்பர் 7 முதல் 30-ம் தேதி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்தது. இதன்படி, சத்தீஸ்கரில் நவ.7, 17 ஆகிய தேதிகளிலும், மிசோரமில் நவ.7, மத்திய பிரதேசத்தில் நவ.17, ராஜஸ்தானில் நவ.25, தெலங்கானாவில் நவ.30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.

தெலங்கானா: தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் கடந்த 30-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில், 71.07 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் 3-வது முறையாக சந்திரசேகர ராவ் ஆட்சியை கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் காங்கிரஸ் கட்சி சந்திரசேகர ராவுக்கு பெரிய ஷாக் கொடுத்துள்ளது.

மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. இங்கு ஆளும் பாஜக ஐந்தாவது முறையாக ஆட்சியை தொடர முயல்கிறது. இதை முறியடிக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிரமாக முயற்சி செய்துள்ளது. இங்கு இதரகட்சிகள் போட்டியிட்டாலும், பாஜக, காங்கிரஸுக்கு இடையே இருமுனைப் போட்டி நிலவியது. தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளை வெளியிட்ட நிறுவனங்களில் சில மீண்டும் பாஜக ஆட்சி எனக் குறிப்பிட்டன. மத்தியப் பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு 116 இடங்களே தேவைப்படும் சூழலில் பாஜக 152 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றில், கங்காநகர் மாவட்டத்தின் காரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. எஞ்சிய 199 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 25-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானில் பாஜக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இங்கு கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ், பாஜக மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. இந்த முறை ஆட்சியை தக்கவைப்போம் என காங்கிரஸ் நம்புகிறது. அடுத்த ஆட்சியை அமைக்க பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டது. கருத்துக் கணிப்புகள் சில ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைக்கும் என்றும் சில பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் தெரிவித்தன. ஆனால் காலை 10.30 மணி நிலவரப்படியே பாஜக பெரும்பான்மைக்கு தேவையான 100 இடங்களைக் கடந்து முன்னிலை வகிக்கிறது.

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு கடந்த நவ.7-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. நவ.17-ம் தேதி இரண்டாவது கட்டமாக மீதமுள்ள தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரு கட்ட தேர்தல்களையும் சேர்த்து சத்தீஸ்கர் தேர்தலில் 76.31% வாக்குகள் பதிவாகியிருந்தது. ஆட்சி அமைக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய தேவை உள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இந்த மாநிலத்தில் பாஜக – காங்கிஸ் இடையே நேரடி போட்டி நிலவியது. இந்நிலையில் பல்வேறு கருத்துக் கணிப்புகளும் ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தெரிவித்தன. ஆனால் இரண்டு கட்சிகளுமே போட்டா போட்டியில் முன்னிலை பெற்றுள்ளன. இருப்பினும் காங்கிரஸ் கை சற்றே ஓங்கியிருக்கிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours