அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தை காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் ஆகமுடிந்தவரை தடுக்கப்பார்த்தன என குற்றம் சாட்டியுள்ளார் அமித் ஷா.
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா இன்றைய தினம் பீகார் மாநிலம் கயாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, மாநிலத்தின் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை கடுமையாக தாக்கினார். ’இண்டியா கூட்டணி’யின் இந்த இரு கட்சிகளும் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுவதாக அமித் ஷா அப்போது குற்றம் சாட்டினார்.
”75 ஆண்டுகளாக, காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள் ராமர் கோயில் கட்டுவதைத் தடுத்து வந்தன. மோடியை இரண்டாவது முறையாக மக்கள் பிரதமராக்கியதும், அந்த மாபெரு மாற்றம் நிகழ்ந்தது. மோடி நீதிமன்ற வழக்கை வென்றது மட்டுமல்லாது, பூமி பூஜை செய்து ஜனவரி 22 அன்று அயோத்தி கோயிலில் ராம் லல்லாவை நிறுவினார்” என்று பால ராமர் கோயில் உருவான பின்னணியை பெருமிதத்துடன் அமித் ஷா நினைவு கூர்ந்தார்.
மேலும் அவர் பேசும்போது, “காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுகின்றன. அதனால்தான் ஜம்மு காஷ்மீரில் இருந்து 370-வது சட்டப்பிரிவை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். உண்மையில் காங்கிரஸ் கட்சி வெட்கப்பட வேண்டும். 1947-ல் நாட்டைப் பிரித்ததில் ஆரம்பித்து, தேசத்தை எத்தனை முறைதான் உடைப்பீர்கள்? ஆனால் இப்போது நாட்டை மோடி ஆளுகிறார். இந்தியாவை இனி எவரும் உடைக்க அனுமதிக்க மாட்டோம்” என ஆவேசம் காட்டினார் அமித் ஷா.
“தேசத்தை உடைக்க காங்கிரஸ் கட்சி வடக்கு-தெற்கு பிரிவினையை உருவாக்குகிறது. இதை தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு மட்டுமன்றி இந்த நாட்டு மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். மக்களவைத் தேர்தலில் இதுபோன்ற பிளவுபடுத்தும் சக்திகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க நாட்டு மக்கள் இப்போது முடிவு செய்துள்ளனர். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய இருக்கிறார்கள்” என்று தனது உரையை, வாக்கு கோரலில் முடித்தார் அமித்ஷா.
+ There are no comments
Add yours