தேவை ஏற்பட்டால் வட இந்தியாவில் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய செல்வேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தற்போது இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் தக் லைப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், சிம்பு, நாசர், அபிராமி உள்ளிட்டோர் பங்கேற்று இருந்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு கமல்ஹாசன் இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தக் லைப் திரைப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரும். இந்தியன் 2 திரைப்படம் அறிவித்த தேதியில் திரைக்கு வரும்” என்றார். வட இந்தியாவில் காங்கிரஸை ஆதரித்து பிரச்சாரம் செய்வீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ”தேவை இருந்தால் கண்டிப்பாக பிரச்சாரம் செய்வேன்” என தெரிவித்தார்.
அப்போது உத்தமவில்லன் திரைப்படம் தொடர்பாக தயாரிப்பாளர் லிங்குசாமி தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள புகார் குறித்து கேட்டபோது, அதற்கு பதில் அளிக்காமல் கமல்ஹாசன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
+ There are no comments
Add yours