மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவரை காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுகவின் தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், இன்றைய தினம் விசிக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மதியம் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், எம்.பி ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன், “ மக்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் 3 தனித்தொகுதிகளிலும் 1 பொதுத்தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளோம்.
கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதால் எல்லா கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டி உள்ளது. இப்போதுதான் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது. எங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளோம். அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின் எந்த தொகுதிகளில் போட்டியிடுவது, தனிச்சின்னம் குறித்தெல்லாம் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் 2019 மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் தொல்.திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் ரவிக்குமாரும் வெற்றி பெற்றனர். இந்த முறை 4 தொகுதிகளை விசிக கேட்டுள்ள நிலையில், அவர்களின் விருப்பத்தை திமுக நிறைவேற்றுமா என்பது விரைவில் தெரியவரும்.
+ There are no comments
Add yours