மதிமுகவிற்கு ஸ்கெட்ச் போடும் மதிமுக !

Spread the love

திமுக கூட்டணியில் மதிமுக கேட்கும் எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்குவதிலும், சின்னம் விவகாரத்திலும் இழுபறி நீடித்து வருகிறது. இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கும் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் முக்கிய அசைண்ட்மெண்ட் ஒன்றை கொடுத்துள்ளார்.

கலைஞர் கருணாநிதி மறைந்த பின்னர் ஸ்டாலின் தலைமையில் திமுக எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் அந்த கட்சி பெரிய வெற்றியை பெற்று வருகிறது. 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து மட்டங்களிலும் பெரும் வெற்றி திமுக வசமாகியது. 2024 மக்களவைத் தேர்தல் முடிவும் தமிழ்நாட்டில் திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.


ஸ்டாலின் பெற்று வரும் இந்த தொடர் வெற்றிக்கு முக்கியமான காரணம், அவர் அமைத்த கூட்டணி என்று உறுதியாக சொல்லலாம். காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி என சிறியதும் பெரியதுமாக பல்வேறு தளங்களில் செல்வாக்குள்ள கட்சிகளை ஒருங்கே கொண்டு வந்து அதை சிதறவிடாமல் கொண்டு செல்வது தான் ஸ்டாலினின் பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

திமுக பக்கம் பலமான கூட்டணி இருப்பதாலே அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளால் பலமிக்க கூட்டணிகளை அமைக்க முடியவில்லை. இந்த கூட்டணியை உடைக்காமல் வெற்றியை பறிக்க முடியாது என்பதையும் அக் கட்சிகள் உணர்ந்துள்ளன.

திமுக கூட்டணியில் பெரிய பிரச்சினை இல்லாமல் ஸ்டாலின் கொண்டு செல்வதால் கூட்டணி உடையாமல் இருக்கிறது என்பது ஒரு காரணம் என்றால், இங்குள்ள கட்சிகள் சென்று சேர்வதற்கும் வலுவான எதிர்தரப்பு என்பது இல்லாமல் இருந்தது. அதாவது பிரதான எதிர்கட்சியான, அதிக தொண்டர் படை கொண்ட அதிமுகவானது பாஜகவோடு பயணித்து வந்ததால் திமுக கூட்டணிக் கட்சிகள் அந்த பக்கம் பார்வையை செலுத்தவே இல்லை.

அதிமுக – பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டு அதிமுக தனியாக வந்த பின்னர் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதாவது திமுக கூட்டணிக்குள் சிறு சிறு அதிருப்தி ஏற்பட்டால் அவர்கள் வந்து சேர்வதற்கு அதிமுக தனது கதவுகளை திறந்து காத்திருந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வைகை செல்வன் ஆகியோர் வெளிப்படையாகவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை தங்கள் பக்கம் அழைத்தனர்.

இந்தியா கூட்டணி மத்தியில் அமைக்கப்பட்டுள்ள சூழலில் மக்களவைத் தேர்தலில் கூட்டணி மாற்றம் இருக்காது என்று கூறப்பட்டது. இருப்பினும் ஏதேனும் ஒரு கட்சி கிளம்பினாலும் அடுத்தடுத்த கட்சிகளுக்கு அது ஊக்கம் அளிக்கும் விதமாக அமைந்து விடும். இப்போது இல்லை என்றாலும் 2026க்குள் திமுக கூட்டணியில் பெரிய மாற்றம் வந்துவிடும். அடுக்கி வைக்கப்பட்ட சீட்டுகட்டில் ஒரு சீட்டை உருவினால் ஒவ்வொன்றாக விழத் தொடங்குமே அது போல.

அந்த ஒரு சீட் யாராக இருக்க வாய்ப்பு உள்ளது என்று விசாரிக்கும் போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சுட்டிக்காட்டுகிறார்கள். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 2019 மக்களவைத் தேர்தலில் ஒரு மக்களவையும், ஒரு மாநிலங்களவையும் கொடுக்கப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இரண்டு பொதுத் தேர்தல்களிலும் மதிமுக திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட பணிக்கப்பட்டது.

ஆனால் இம்முறை ஒரு மக்களவைத் தொகுதி மட்டும் தான் ஒதுக்குவோம் என்றும், இந்த முறையும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் திமுக நிபந்தனை விதிக்கிறது. ஆனால் மதிமுகவோ கடந்த முறை ஒதுக்கியது போல 1 + 1 என்ற அடிப்படையில் எங்களுக்கு ஒதுக்குங்கள். ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறது.

திமுகவோ இதற்கு சம்மதிக்கவில்லை. பிப்ரவரி 29ஆம் தேதி மதிமுக தரப்பில் பேச்சுவார்த்தைக்கு வந்து சென்ற பின்னர் இதுவரை அந்த கட்சியை மீண்டும் திமுக தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. திமுக கூட்டணியில் நடைபெறும் இந்த சங்கதிகளை உற்றுநோக்கி வரும் அதிமுக மதிமுகவுக்கு ஸ்கெட்ச் போட தயாராகிவிட்டது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் அதிமுக சார்பில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது. மதிமுகவை தங்கள் பக்கம் நகர்த்தி வரும் வேலையை எடப்பாடி பழனிசாமி எஸ்.பி.வேலுமணியிடம் கொடுத்துள்ளாராம். மூன்று மக்களவை இடங்கள், ஒரு மாநிலங்களவை இடம் அதிமுக தரப்பில் மதிமுகவுக்கு தர தயாராக இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலை திட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அதில் அதிமுகவின் ஆஃபர், திமுகவின் நிபந்தனை ஆகியவை குறித்து விவாதித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் மாற்றம் வர வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுவது இயல்பு தான். ஆனால் மதிமுகவின் கடந்த கால தேர்தல் கூட்டணி வரலாறு என்பது எத்தகைய மாற்றமும் நடப்பதற்கான சாத்தியம் இருப்பதை உணர்த்துகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours