கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “தேர்தல் நெருங்க நெருங்க பிரமர் மோடிக்கு ஜுரம் அதிகரித்து வருகிறது. 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெறுவோம் என கூறி வந்த அவரின் கணக்கு சரியத் தொடங்கி உள்ளது. இதனை சரிக்கட்ட பிரச்சினையை திசை திருப்ப மோடி முயற்சிக்கிறார்.
கச்சத்தீவு இன்று நேற்று ஏற்பட்ட பிரச்சினை இல்லை. 1974-ம் ஆண்டு கச்சத்தீவு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, நல்ல எண்ணம் அடிப்படையில் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. அதனை மீட்க வேண்டும் என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதனை கட்டாயம் மீட்க வேண்டும். ஏன் என்றால், அது தமிழகத்தின் எல்லைப் பகுதியிலிருந்து மிக குறைந்து தொலைவில் உள்ளது.
அதுமட்டும் இல்லாமல் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போது, கச்சத்தீவில் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும், மீன்களை காயவைக்கவும், அங்குள்ள தேவாலயத்தில் வழிபடுவதற்காக மீட்க வேண்டும்.
10 ஆண்டு காலம் மோடி பிரதமராக இருந்தாரே, அவர் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது தவறு என கருதி இருந்தால், அவர் 10 ஆண்டு காலத்தில் சட்டத்தின் மூலம் கச்சத்தீவை மீட்டு இருக்கலாம். மீட்க அனைத்து வாய்ப்புகளும் இருந்தும், அதனை பயன்படுத்தவில்லை.
அதேபோல் இன்று வெளியுறவு துறை அமைச்சராக இருந்தவர் ஏற்கெனவே வெளியுறவு துறை செயலாளராக இருந்தார். அப்போதும் அவர் கச்சத்தீவு குறித்து பேசவில்லை இப்போதும் அவர் பேசவில்லை. ஆனால், திடீரென விழித்து கொண்டதுபோல் காங்கிரஸும், திமுகவும் கச்சத்தீவை தாரைவார்த்து விட்டது என சொல்லி பிரச்சினையை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள்.
பிரமர் மோடி நாட்டு மக்களை ஏமாற்றி 3-வது முறையாக மீண்டும் பிரமராக நினைக்கிறார். கடந்த 2019 தேர்தலில் இண்டியா கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளும் சிதறி தனித்தனியாக போட்டியிட்டனர். மோடி 37 சதவீதம் வாக்குகள் பெற்று அதிகாரத்துக்கு வந்துவிட்டார். இன்றைக்கு பிரிந்த அனைத்து கட்சிகளும் ஒன்றாக ஒரே அணியாக களம் காண்கிறது. இந்தியாவில் இண்டியா கூட்டணி தான் வெற்றி பெறும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது.
தமிழகத்தில் பாஜக – பாமக கூட்டணி என்பது நள்ளிரவு கூட்டணி. அதிமுக கூட்டணி என்பது கள்ளக் கூட்டணி. நள்ளிரவு கூட்டணியும், கள்ளக் கூட்டணியும் சென்ற தேர்தலில் ஒன்றாகதான் இருந்தார்கள். அவர்களை எதிர்த்து யார் எல்லாம் போட்டியிட்டோமோ அதே எங்கள் கூட்டணி மீண்டும் போட்டியிட்டு 40 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெறுவோம்” என்றார்.
+ There are no comments
Add yours