சென்னை திருவேற்காட்டில் இருந்து நேற்று வள்ளலார் நகர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து அமைந்தகரை அருகே சென்ற போது கடைசி இருக்கையின் அடியில் இருந்த பலகை உடைந்து பெண் ஒருவர் கீழே விழுந்தார். காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக எதிர்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அமைந்தகரையில் ஓடும் மாநகரப் பேருந்தில் இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து பெண் ஒருவர் சாலையில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
ஆட்சிக்கு வந்தது முதலே எந்த ஒரு புதிய பேருந்துகளையும் வாங்காமல், தரமற்ற, பயன்பாட்டிற்கு தகுதியற்ற பேருந்துகளுக்கெல்லாம் பிங்க் நிற பெயிண்ட் பூசி “மகளிர் இலவசப் பேருந்து” என்ற பெயரில் இயக்கி பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்கே ஆபத்தான நிலையினை உருவாக்கியிருக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இனி பஸ் இலவசம் என்பதை தாண்டி , மக்களுக்கு மாவுகட்டும் இலவசம் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை,
மக்கள் இவர்கள் ஆட்சியில் உயிர்பிழைத்து வாழ்வதே மாபெரும் சாதனை என்ற நிலையிலே தான் இன்றைய திமுக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் இருக்கின்றன என்பதற்கு இம்மாதிரியான நிகழ்வுகள்தான் சாட்சி.
+ There are no comments
Add yours