மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ எஸ்.டி.சோமசேகர் வாக்களித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் 15 மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் 41 இடங்களுக்கு கட்சிகள் கொண்டுள்ள எம்எல்ஏ-க்கள் ஆதரவு அடிப்படையில் போட்டியின்றி தேர்வாகினர். மீதமுள்ள 15 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் கர்நாடகா மாநிலம், யஷ்வந்த்பூர் தொகுதி பாஜக எம்எல்ஏ சோமசேகர், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பாஜக வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. கட்சியின் மத்திய தலைமையுடன் கலந்தாலோசனை செய்து எம்எல்ஏ எஸ்.டி.சோமசேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தலைமைக் கொறடா தொட்டனகவுடா ஜி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக எம்எல்ஏ எஸ்.டி.சோமசேகரிடம் கேட்டதற்கு, “வாக்குறுதி கொடுத்தவர்களுக்கு வாக்களித்துள்ளேன். எனக்கு உறுதியளித்தவர்களுக்கு எனது வாக்கு சென்றுள்ளது” என்றார். அவரிடம், பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தீர்களா என்ற கேட்ட போது, அவசரமாக விதான சவுதாவை விட்டு வெளியேறினார்.
இதுகுறித்து கர்நாடகா முன்னாள் முதல்வர் எச்.டி.தேவகவுடா கூறுகையில், “சோமசேகர் தனது தொகுதியை மேம்படுத்த வேண்டும் என்ற சாக்கில் பாஜகவில் சேர்ந்தார். ஆனால், மூன்று ஆண்டுகள் கேபினட் அமைச்சராக இருந்த அவர் தன்னை மட்டுமே வளர்த்துக் கொண்டார்” என்று குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து சோமசேகரிடம் கேட்ட போது, “காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து முதலமைச்சரானபோது தேவகவுடா சந்தர்ப்பவாதி இல்லையா?” என்று வினா எழுப்பினார். சமீபத்தில் நடைபெற்ற எம்எல்சி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு, பாஜக எம்எல்ஏ சோமசேகர் ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours