காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 6-ம் தேதி ஜெய்ப்பூரில் இருந்து வெளியிடப்படும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாசாரா தெரிவித்துள்ளார். இதில், கட்சியின் 5 நீதிக் கொள்கையின் கீழ் 25 வாக்குறுதிகள் மற்றும் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கான உறுதிமொழிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸின் உயர் மட்ட தலைவர்களும், மாநில காங்கிரஸின் மூத்த உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த ஜனவரி மாதம் பொதுமக்களிடமிருந்து யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைக் கேட்டிருந்தது. “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்கள் அறிக்கையாக இருக்கும். பொதுமக்களின் யோசனைகளைப் பெறுவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன முடிந்தவரையிலான யோசனைகள் அறிக்கையில் இணைக்கப்படும்” என்று ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் வேட்பாளாரான சசி தரூர், “காங்கிரஸ் கட்சியின் தேரதல் அறிக்கை வேலைவாய்ப்பின்மை, விலையேற்றம், ஏழைகளுக்கான வருமான ஆதாரம், பெண்கள் உரிமை, விவசாயிகள் நலனில் கவனம் செலுத்தும்” என்று தெரிவித்திருந்தார்.
கடந்த 19-ம் தேதி நடந்த காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் 25 வாக்குறுதிகளுடன் 5 நீதிக் கொள்கைகள் இடம்பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்குப் பின் எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தகவலில், ‘‘நாடு மாற்றத்துக்கான அழைப்பை விடுக்கிறது. நமது தேர்தல் அறிக்கை ஒவ்வொரு மாநிலத்திலும் வெளிப்படுத்துவது, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் நமது உறுதிப்பாட்டை எடுத்துச் செல்வது ஆகியவற்றை உறுதி செய்வது நம் அனைவரின் கடமை’’ என தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை ராஜஸ்தானில் வைத்து வெளியிடுவது என்பது மிகவும் சுவாரஸ்யம் தரும் தேர்வு. கடந்த 2009-ம் ஆண்டுக்கு பின் நடந்த மக்களவைத் தேர்தல்களில் ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக முறையே மாநிலத்தின் மொத்தமுள்ள 25 மற்றும் 24 இடங்களில் வெற்றி பெற்றது. சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவிடம் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் கட்சி 70 இடங்களிலும்,, பாஜக 115 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. கடந்த காலங்களில் மோடி அலை வீசிய இந்தி ஹார்ட்லேண்ட் எனப்படும் 5 மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று.
கடந்த காலத்தைப் போலவே இந்த முறையும் பழைய பாரம்பரியம் தொடரும் என்று மோடி தலைமையிலான பாஜக நம்புகிறது. இந்த 5 மாநிலங்களும் சேர்த்து மக்களவையில் 235 இடங்களை நிரப்புவதால், பாஜகவின் 400 என்ற கனவுக்கு இது மிகவும் முக்கியமானது.
இந்தப் பின்னணியில் ராஜஸ்தானில் பாஜகவின் தேர்தல் இயந்திரத்தை காங்கிரஸால் குலைக்க முடிந்தால் அது மூன்றாவது முறையாக மோடி பிரதமராகும் பாஜகவின் கனவை கலைக்க காங்கிரஸுக்கு பெரிதும் உதவும்.
+ There are no comments
Add yours