திமுகவும், காங்கிரஸும் பணக்கார கட்சி… இபிஎஸ் !

Spread the love

மத்தியில் 14 ஆண்டு காலம் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த திமுக மக்களுக்கு எதையும் செய்யவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பியை ஆதரித்து திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது:

அதிமுக கூட்டணியைப் பற்றி போகிற இடமெல்லாம் ஸ்டாலின் விமர்சிக்கிறார். அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிற அனைத்து கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் உழைப்பாளிகள். இவர்கள் மக்களின் பிரச்சினைகளை நன்கு உணர்ந்தவர்கள். ஆனால், திமுகவும், காங்கிரஸும் பணக்கார கட்சி. ஆடை கூட கசங்காமல் வாக்கு கேட்கிற தலைவர்கள் திமுகவிலும், காங்கிரஸிலும் இருக்கிறார்கள்.

இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் நிறைய திட்டங்களைக் கொண்டு வருவோம் என்று ஸ்டாலின் சொல்கிறார். இது வேடிக்கையாக இருக்கிறது. ஏற்கெனவே 14 ஆண்டு மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற திமுக மக்களுக்கு எதையும் செய்யவில்லை.

அதிமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி அதிகாரத்துக்கு எப்போதும் அடிபணிந்தது கிடையாது. வாக்கு அளித்த மக்களுக்கு விசுவாசமாக இருந்து, அவர்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து, மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்கிறோம். ஆட்சி அதிகாரம் மத்தியில் இருக்க வேண்டும் என்று நாங்கள் எண்ணியிருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்போம்.

தேசிய கட்சிகள், மாநில கட்சிகளைப் புறக்கணிக்கின்றன. தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் பார்வை தேசிய அளவில் இருக்கிறதே தவிர, மாநில அளவில் இல்லை. தேசிய அளவில் ஒரு சட்டத்தைக் கொண்டு வரும்போது தமிழ்நாடு பாதிக்கின்ற பொழுது, கூட்டணி தர்மம் காரணமாக அதை எதிர்த்துக் குரல் கொடுக்க முடியவில்லை. எனவே வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாக இருப்பதற்கும், தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாப்பதற்கும், மாநில வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக கருத்துகளைச் சொல்வதற்கும் கூட்டணியிலிருந்து விலகி வந்து, அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமைத்துள்ளோம்.

2019 மக்களவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் அளித்த பல்வேறு வாக்குறுதிகளை நம்பி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு 38 இடங்களை மக்கள் வழங்கினர். அந்த 38 மக்களவை உறுப்பினர்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது?

அதிமுக ஆட்சியில் இருந்தபோது என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தோம் எனச் சொல்லி நாங்கள் வாக்கு கேட்டு வருகிறோம். நீட் தேர்வைக் கொண்டு வந்தது திமுகவும், காங்கிரஸும்தான். தற்போது அதை ரத்து செய்வோம் என்று சொல்வதும் அவர்கள்தான். இப்படி இரட்டை வேடம் போடுகிற, மக்களை ஏமாற்றுகிற கூட்டணியை நம்பக்கூடாது.

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை ஒவ்வொன்றாக ரத்து செய்து வருகிறது திமுக அரசு. போதைப் பொருள் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க இந்த அரசுக்குத் திறமையில்லை. அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. கொலை, கொள்ளை உள்ளிட்ட அத்தனையும் தடுத்து நிறுத்தப்பட்டன.

வட சென்னை: இதேபோல் வட சென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து பெரவள்ளூரில் நேற்று பழனிசாமி பேசியது:

ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. ஏனென்றால் நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டோம். நாங்கள் விலகினால் இவருக்கு ஏன் எரிச்சல் வருகிறது. பாஜக- அதிமுக இடையே கள்ள உறவு என்று ஸ்டாலின் கூறுகிறார். ஒரு உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஒரு கீழ்தரமான வார்த்தை வருகிறது என்றால் அது ஸ்டாலின் குடும்பத்துக்கு மட்டும்தான் வரும்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியது தான் திமுக ஆட்சியின் சாதனை. இந்த ஆட்சி இருப்பது இன்னும் 24 அமாவாசை தான். திமுகவில் ஆள் இல்லை. 8 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து சென்றவர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours