நடிகர் விஜய்யை கண்டு திமுக பயப்படுவதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்
ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். மேலும், இரத்த தானம் வழங்கியவர்களுக்கு அவர் மரக்கன்றுகள் வழங்கினார்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் , “நடிகர் விஜய்யை கண்டு திமுக பயப்படுகிறது. அரசானது நடிகர்களிடையே பாரபட்சம் பார்க்கக் கூடாது. அதிமுக ஆட்சி காலத்தில் எந்த பாரபட்சம் இல்லை. 2006 முதல் 2011வரை ஒரு குடும்ப கட்டுப்பாட்டில் இருந்தது, திமுக ஆட்சி காலத்தில் திரைத்துறை முடங்கி போய் இருந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் வெளிப்படையான நிர்வாகத்தினால் திரைத்துறை நல்ல முன்னேற்றத்தை பெற்றது.” என்றார்.
சிறப்பு காட்சி வழங்கிய பின்னர் குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது முறை கிடையாது என்ற அவர், “தற்போது திரைத்துறை முடங்கி உள்ளதாக அந்தத் துறையைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர். தமிழ் சினிமாவில் 200 திரைப்படங்களை வெளியிட முடியாமல் முடங்கி உள்ளது. இதற்கு காரணம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆதிக்கம்தான்.” என்று குற்றம் சாட்டினார்.
“ரெட் ஜெயன்ட் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக உள்ளார். நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடத்த பல்வேறு காரணங்களை கூறி அனுமதி தரவில்லை. ஆனால் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர் படத்திற்கு அனுமதி கொடுத்தனர். பாரபட்சமாக பார்க்கப்படும் நிலை திரைத்துறைக்கு நல்லது கிடையாது.” என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
திரைத்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றூ வலியுறுத்திய அவர், “அதிமுக ஆட்சி காலத்தில் திரைத்துறை சுதந்திரமாக செயல்பட்டது. தற்போது உள்ள ஆட்சியாளர்கள் அப்படி செயல்பட மாட்டார்கள்.” என்றும் குற்றம் சாட்டினார்.
+ There are no comments
Add yours