இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நடிகை கங்கனா ரனாவத் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா ஷிரினேட் கூறியதாகக் கூறப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்து திங்களன்று அரசியல் சர்ச்சையைத் தூண்டியது. மேலும், ஆளும் கட்சியான பா.ஜ.க, காங்கிரஸ் கட்சியைத் தாக்கி, சுப்ரியா ஷிரினேட்டை கட்சியின் சமூக மற்றும் டிஜிட்டல் ஊடகத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
கங்கனா ரனாவத்தின் புகைப்படத்துடன் இந்தியில் உள்ள கருத்து சுப்ரியா ஷ்ரினேட்டின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து வெளியிடப்பட்டது. அந்தப் பதிவில் “மண்டியில் என்ன விலை போகிறது என்று யாராவது சொல்ல முடியுமா” என்று கங்கனா ரனாவத் மற்றும் அவரது தொகுதியான மண்டியை இழிவுபடுத்தும் வகையில் பதிவிடப்பட்டு இருந்தது.
தான் பதிவிடவில்லை என்று மறுப்பு தெரிவித்த சுப்ரியா ஷ்ரினேட், இது தனது கணக்குகளை அணுகக்கூடிய ஒருவரால் வெளியிடப்பட்டதாகக் கூறினார். “எக்ஸ் தளத்தில் என் பெயரில் போலி கணக்கை வைத்திருக்கும் யாரோ ஒருவரால் இந்த கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளது, அந்த நபர் யார் என்று எனக்கு தெரியவில்லை. இது எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட தருணத்தில், அந்தக் கணக்கு குறித்து எக்ஸ் தளத்தில் புகார் தெரிவித்தேன். எனது மெட்டா கணக்குகளை அணுகக்கூடிய ஒருவர் அந்த ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை அங்கு பதிவிட்டார், நான் அதை உடனடியாக நீக்கிவிட்டேன்,” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் சுப்ரியா ஷிரினேட் கூறினார்.
மேலும் “எனது மெட்டா கணக்குகளை அணுகக்கூடிய ஒருவர் முற்றிலும் அருவருப்பான மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை பதிவிட்டுள்ளார், அந்தப் பதிவு அகற்றப்பட்டது. ஒரு பெண்ணை நான் அப்படிச் சொல்லமாட்டேன் என்று என்னைத் தெரிந்தவர்களுக்குத் தெரியும். இருப்பினும், எனது பெயரை தவறாகப் பயன்படுத்தும் போலி கணக்கு எக்ஸ் பக்கத்தில் (@Supriyaparody) இயங்குகிறது என்பதை நான் கண்டுபிடித்துள்ளேன், இந்த போலி கணக்கு தான் சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டது. போலி கணக்கு தொடர்பாக புகாரளிக்கப்பட்டுள்ளது” என்று சுப்ரியா ஷ்ரினேட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேநேரம் சுப்ரியா ஷ்ரினேட் மற்றும் காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க தாக்கியபோது, கங்கனா ரனாவத் “ஒவ்வொரு பெண்ணும் அவளுடைய கண்ணியத்திற்கு தகுதியானவர்” என்று பதிலளித்தார்.
“அன்புள்ள சுப்ரியா ஜி. கடந்த 20 வருடங்களில் கலைஞராக அனைத்து விதமான பெண் கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளேன். குயின் படத்தில் ஒரு அப்பாவி பெண்ணிலிருந்து தாகட் படத்தில் மயக்கும் உளவாளி வரை, மணிகர்ணிகாவில் ஒரு தெய்வத்திலிருந்து சந்திரமுகியில் ஒரு பேய் வரை, ரஜ்ஜோவில் ஒரு விபச்சாரியிலிருந்து தலைவியில் ஒரு புரட்சிகரத் தலைவர் வரை. தப்பெண்ணங்களின் தளைகளில் இருந்து நம் மகள்களை விடுவிக்க வேண்டும், அவர்களின் உடல் உறுப்புகள் பற்றிய ஆர்வத்தை விட நாம் உயர வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக பாலியல் தொழிலாளர்களின் சவாலான வாழ்க்கையை அல்லது சூழ்நிலைகளை ஒருவித துஷ்பிரயோகம் அல்லது அவதூறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்… ஒவ்வொரு பெண்ணும் அவளுடைய கண்ணியத்திற்கு தகுதியானவள்,” “எக்ஸ்’ தளத்தில் கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிற கொச்சையான, ஆட்சேபனைக்குரிய பதிவுகளின் ஸ்கிரீன் கிராப்பைப் பகிர்ந்த கங்கனா ரனாவத் மேலும் கூறியதாவது: “ஒரு இளைஞனுக்கு சீட் கிடைத்தால், அவனது சித்தாந்தம் தாக்கப்படுகிறது. ஒரு இளம் பெண்ணுக்கு சீட் கிடைத்தால், அவளது பாலுணர்வு தாக்கப்படுகிறது. விசித்திரம்!! ஒரு சிறிய நகரத்தின் பெயரை காங்கிரஸார் பாலுறவுடன் கொச்சைப்படுத்துகின்றனர். மண்டி ஒரு இளம் பெண் வேட்பாளரைக் கொண்டிருப்பதால் எல்லா இடங்களிலும் பாலியல் சூழல் பயன்படுத்தப்படுகிறது. பாலியல் போக்கை வெளிப்படுத்தும் காங்கிரஸ் கட்சியினர் அவமானப்பட வேண்டும்”
காங்கிரஸைக் குறிவைத்து, பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா கூறினார்: “இது அருவருப்பானது. கங்கனா ரனாவத் குறித்து சுப்ரியா ஷிரினேட் கூறிய கருத்து கேவலமானது. உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இதுகுறித்து பிரியங்கா காந்தி பேசுவாரா? கார்கே ஜி அவரை பதவி நீக்கம் செய்வாரா? ‘ஹத்ராஸ்’ லாபி இப்போது எங்கே இருக்கிறது? முதலில் சந்தேஷ்காலியை நியாயப்படுத்தினார்கள், பிறகு லால் சிங்கிற்கு காங்கிரஸில் இருந்து சீட்டு கிடைத்தது, இப்போது இது.”
“காங்கிரஸின் சுப்ரியா ஷிரினேட் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் கங்கனா ரனாவத் மீது அருவருப்பான கருத்தைத் தெரிவித்துள்ளார். இது மிகவும் கேவலமானது, காங்கிரஸ் எப்படி ஒரே இடத்தில் இவ்வளவு அழுக்கை சேகரிக்கிறது என்று கேட்காமல் இருக்க முடியாது? காங்கிரஸ் தலைவர் (மல்லிகார்ஜுன்) கார்கே கட்சியில் ஏதேனும் கருத்து இருந்தால், அவர் உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், இல்லையெனில் ராஜினாமா செய்ய வேண்டும்,” என்று பா.ஜ.க.,வின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மால்வியா கூறினார்.
மத்திய அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான ஸ்மிருதி இரானியும் ‘எக்ஸ்’ தளத்தில் “சக்திவாய்ந்த கங்கனாவின் இந்த அரசியல் துவக்கம் நீங்கள் யார் என்பதல்ல மாறாக அவர்கள் என்ன செய்தார்கள் & தொடர்ந்து என்ன செய்யக்கூடியவர்கள் என்பதை பிரதிபலிக்கிறது, எஃகு பெண்களை எப்படி கையாள்வது என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. வெற்றியை நோக்கி பயணிக்கவும்,” என்று பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours