திமுகவில் துணை பொதுச் செயலாளராகவும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருப்பவர் கனிமொழி. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளாக இருந்தபோதும் முதலில் பத்திரிகையாளராக தனது பொது வாழ்க்கையை துவங்கியவர். எழுத்தாளராகவும் பரிணமித்தார்.
இதனைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக 2013ஆம் ஆண்டு மாநிலங்களவை எம்.பி ஆனார். 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த அவர், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல் முறையாக மக்களவைக்கு சென்றார்.
மக்களவையில் மொழி தொடர்பான விவகாரங்களிலும், மாநில உரிமை சார்ந்த விஷயங்களிலும் மத்திய அரசுக்கு எதிராக திமுகவின் கருத்துக்களை ஆணித்தரமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் கனிமொழி முன்வைத்து வந்தார். அதேபோல பெண்கள் உரிமைகள் தொடர்பான விஷயங்களிலும் அழுத்தமாக குரல் கொடுத்து வந்தார்.
தூத்துக்குடியில் வீடு எடுத்து தங்கி அங்கு தொகுதிப் பணிகளை மேற்கொண்டு வந்தார். தூத்துக்குடியில் மழை வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டபோது களத்தில் இறங்கி பணியாற்றியது பல்வேறு தரப்பிலும் பாராட்டைப் பெற்றது. திமுகவில் வரும் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை குழு, கனிமொழி தலைமையில்தான் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்துள்ளார்.
இதனிடையே திமுகவில் வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு மார்ச் 1 முதல் 7ஆம் தேதி வரை அண்ணா அறிவாலயத்தில் பெறப்பட்டது. தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட கனிமொழி விருப்ப மனுவை தாக்கல் செய்தார். இந்த நிலையில் விருப்ப மனு தாக்கல் செய்தோருக்கான நேர்காணல் இன்று முதலமைச்ச மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து விருப்ப மனு தாக்கல் செய்தோரிடம் கேட்டறிந்தனர்.
தூத்துக்குடி தொகுதிக்கான நேர்காணல் நடைபெற்றபோது கனிமொழி மட்டுமே நேர்காணலில் கலந்துகொண்டார். ஏனெனில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி எம்.பியை தவிர வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யவில்லை. அவரிடம் வெற்றிவாய்ப்பு நிலவரங்கள் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இதனால் கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் களமிறங்குவது உறுதியாகி உள்ளது. இரண்டாவது முறையும் கனிமொழியை வெற்றிபெற வைப்போம் என இப்போதே திமுக நிர்வாகிகள் கூறத் தொடங்கிவிட்டனர்.
+ There are no comments
Add yours