மக்களவைத் தேர்தலில் பாஜக தங்களது சின்னமாக தாமரையை கடந்த பல தேர்தல்களில் பயன்பத்தி வருகிறது. பாஜகவின் கொடியிலும் காவி நிறத்திலான தாமரை இடம்பெற்று இருக்கும்.
இதனிடையே பாஜகவுக்கு சின்னமாக தாமரையை ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அகிம்சை சோசலிச கட்சியின் தலைவரும், சமூக ஆர்வலருமான ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஒரு வழக்கை தொடர்ந்து இருந்தார்.
அதில், “தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு சின்னமாக ஒதுக்கியது அநீதி. அது நாட்டின் ஒருமைப்பாட்டையே இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியதை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்தில் செப்டம்பர் மாதம் மனு அளித்தேன்.
ஆனாலும், எனது மனு மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த செயலானது இயற்கை நீதிக்கே எதிரானது. ஆகவே, எனது மனுவை பரிசீலனை எய்து பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.
இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்க பூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், “தாமரை மலர் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநில அரசுகளும் அதனை மாநில சின்னமாக அறிவித்துள்ளன” என்று சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், “தாமரை ஒரு மதத்தின் சின்னம் என்பதால், பாஜகவிற்கு தாமரை சின்னத்தை ஒதுக்கியது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் படி தவறானது. அதுமட்டும் இல்லாமல் அரசு சின்னங்களில் தாமரை இடம் பெற்றுள்ளதால் இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகும்” என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. வாதங்களை கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தாமரை சின்னத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அது விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு, தேர்தல் ஆணையம் முறைப்படிதான் தாமரை சின்னத்தை ஒதுக்கியுள்ளது, ஏற்கனவே இவ்வழக்கு விசாரணையில் மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் காட்டமான கேள்விகளை முன்வைத்தனர். அதனால் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படலாம் என்று கூறுகிறார்கள் பாஜக தரப்பில்.
+ There are no comments
Add yours