நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தலைமையில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்சிகளிடையே தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9, புதுச்சேரியில் 1 என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. கடந்த முறை காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட திருச்சி, தேனி, ஆரணிக்கு பதிலாக கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய 3 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ளது.
தொகுதிகள் இறுதி செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, அந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு பெற்ற காங்கிரஸ் கட்சி முதற்கட்டமாக நெல்லை, மயிலாடுதுறை தவிர மற்ற 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று முன் தினம் இரவு வெளியிட்டது. அந்த இரு தொகுதிகளை பலரும் கேட்டு வந்ததால் இழுபறி நிலவியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், நெல்லை மற்றும் மயிலாடுதுறையில் போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அதனுடன் சேர்த்து, விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளரும் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் ராகுல் காந்திக்கு நெருக்கமான ப்ரவீன் சக்கரவர்த்தி, நெல்லையில் பால்ராஜ் அல்லது ராமசுப்பு ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
+ There are no comments
Add yours