வன்மையாகக் கண்டிக்கத்தக்கது… அண்ணாமலை !

Spread the love

டெல்லியில் கடந்த வாரம் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையை சேர்ந்த திமுக அயலக அணி நிர்வாகி ஜாபர் சாதிக் என்பவர், இந்த போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் ஜாபர் சாதிக் தலைமறைவானார். அவர் திமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சென்னையின் பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்டா நகர் சஹாரா எக்ஸ்பிரஸ் கூரியர் நிறுவனத்திலும் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர்.

இதுதொடர்பாக செய்தி சேகரிக்க பிரபல தனியார் நியூஸ் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் அ.செந்தில்குமார் நேற்று செய்தி சேகரிக்க சென்ற போது, அந்த நிறுவனத்தின் கீழ் அமைந்துள்ள திமுக மேற்கு மாவட்ட அலுவலகத்தில் இருந்து வந்த சிலர் செந்தில் குமாரை அறைக்கு இழுத்து சென்று அவரை அடைத்து வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக செந்தில்குமார் புகார் அளித்த நிலையில் அதன் மீது எந்த போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

அதேநேரம் பெண் ஒருவர் அளித்த பொய் புகாரில் போலீஸார் செந்தில்குமார் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசுவுக்குச் சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தில், நேற்றைய தினம், தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் சோதனை நடத்தியதை, செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் செந்தில் குமாரை, அறையில் அடைத்து வைத்து, திமுகவினர் கடுமையாகத் தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, அவர் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, தற்போது, 55 வயது பெண்மணி ஒருவரை, திரு.செந்தில் குமார் மீது போலியான புகார் கொடுக்க வைத்து, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார். திமுகவின் பேச்சைக் கேட்டு, தமிழக காவல்துறை செயல்படுவது, மிகவும் துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல, அவர்கள் பணி தர்மத்துக்கு விரோதமானதும் கூட என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

காவல்துறை, சட்டப்படி நடக்க வேண்டுமே தவிர, திமுக கட்சியின் ஒரு பிரிவாக அல்ல என்றும் உடனடியாக, செந்தில் குமார் மீது பதிவு செய்துள்ள பொய்யான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், செந்தில் குமாரைத் தாக்கிய திமுக குண்டர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours