அதிமுகவில் மக்களவை உறுப்பினர், பொருளாளர், துணை பொதுச் செயலாளராக இருந்தவர் டிடிவி தினகரன். 2017ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒன்றுகூடி தினகரனை கட்சியில் இருந்து நீக்கியது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாக நின்று வென்றார். இதனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கி நடத்தி வருகிறார். 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் தினகரன் கட்சி போட்டியிட்டது.
2021 சட்டமன்றத் தேர்தலில் அமமுக சார்பில் முதுகுளத்தூர் தொகுதியில் முருகன் என்பவர் போட்டியிட்டார். அவரை ஆதரித்து டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பத்து கார்கள், இருபது இரு சக்கர வாகனங்களுடன் பரப்புரை செய்தனர் என்றும், ஒலிப்பெருக்கி பயன்படுத்தியதோடு பட்டாசுகளை வெடித்தனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக பொது மக்களுக்கு இடையூறு செய்து தேர்தல் விதிகளை மீறியதாக கமுதி காவல் நிலையத்தில் டிடிவி தினகரனுக்கு எதிராக தேர்தல் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “எனக்கு எதிரான குற்றச்சாட்டில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை. 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த நிகழ்வுக்காக 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி தினகரன் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, அவர் மீதான வழக்கை ரத்து செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு டிடிவி தினகரன் தரப்புக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வளர்மதி வழக்குகளை சூமோட்டோவாக மறு ஆய்வுக்கு எடுத்து அதிரடி காட்டியவர். ஐ.பெரியசாமி வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளார். மற்ற வழக்குகளின் இறுதி விசாரணையில் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours