ஏதோ மழுப்பலாக பேசுவது இல்லை… விஷால் !

Spread the love

அரசியல் என்பது பொதுப்பணி. அது ஒரு சமூக சேவை. சினிமா உள்ளிட்ட மற்ற துறைகளைப் போன்ற ஒரு துறை கிடையாது. அரசியல் என்பது பொழுதுபோக்கும் இல்லை. பொழுதுபோக்குவதற்காக சும்மா வந்துபோகும் இடமும் கிடையாது” என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

சென்னையில் நடிகர் விஷால் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அரசியல் என்பது பொதுப்பணி. அது ஒரு சமூக சேவை. சினிமா உள்ளிட்ட மற்ற துறைகளைப் போன்ற ஒரு துறை கிடையாது. அரசியல் என்பது பொழுதுபோக்கும் இல்லை. பொழுதுபோக்குவதற்காக சும்மா வந்துபோகும் இடமும் கிடையாது. மக்களுக்கு யார் நன்மை செய்தாலும் அவர்கள் அனைவருமே அரசியல்வாதிகள்தான்” என்றார்.

அப்போது 2026-ல் நீங்கள் அரசியலுக்கு வருகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “2026-ல் தேர்தல் வருகிறது. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. நான் அரசியலுக்கு வரமாட்டேன், நான் வரப் போகிறேன் என்று கூறிவிட்டு வராமல் இருப்பது, அப்படி எல்லாம் எதுவும் இல்லை. அந்தந்த நேரத்தில், காலக்கட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுமோ, அது எடுக்கப்படும்.

காரணம், நான் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆவேன் என்று எனக்கே தெரியாது. ஒரு நடிகனாக நான் 2004-ல் இருந்து செயல்பட்டு வந்தேன். எனக்கு நடிகர் சங்க அட்டை வழங்கிய ராதாரவியை எதிர்த்து நிற்பேன் என்று கனவில்கூட நான் நினைத்துப் பார்க்கவில்லை. அதேபோல், தயாரிப்பாளர் சங்கத்தில் நான் நிற்பேன் என்றும் எதிர்பார்க்கவில்லை. அதுபோலத்தான், எல்லாமே அந்தந்த காலக்கட்டத்தில் எடுக்கக்கூடிய முடிவுதான்.

எனவே, அந்த நேரத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டால், சரியான பதில் வரும். இது ஏதோ, மழுப்பலாக பேசுவது இல்லை. நான் அந்த நேரத்தில் வருவேன், வரமாட்டேன் என்று கூறுவது போன்றது கிடையாது.

முன்பெல்லாம், ஒரு திரையரங்கில் ஒரு சினிமா அல்லது இரண்டு சினிமாதான் ஓடும். இன்று மல்டிபிளக்ஸ் வந்ததால் 6 முதல் 7 படங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. இது ஒரு வளர்ச்சி. அதேபோலத்தான் 2026 தேர்தலில், மக்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய பிரதிநிதிகள் நிறைய பேர் இருப்பார்கள் என்பதுதான் என்னுடைய கருத்து” என்று விஷால் கூறினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours