வட சென்னை தொகுதி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரே நேரத்தில் வந்து தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 25) சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் வட சென்னை தொகுதியின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தந்தனர். இதனையடுத்து யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.
திமுக வேட்பாளருக்கு 2-ம் எண் டோக்கன் வழங்கப்பட்டிருந்தாகவும், அதிமுக வேட்பாளருக்கு 7-ம் எண் டோக்கன் வழங்கப்பட்டிருந்தாகவும் சொல்லப்படுகிறது. அதேநேரம், அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ முதலில் வந்ததாகவும், திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 15 நிமிடம் தாமதமாக இரண்டாவதாக வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால், கலாநிதி வீராசாமி முதலில் தேர்தல் அதிகாரி அறைக்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்ய முயன்றார். அப்போது வெளியில் காத்திருந்த அதிமுகவினர் இது தொடர்பாக காவலர்களிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து அவர்களும் தேர்தல் அதிகாரி அறைக்குச் சென்றனர். அப்போது இருக்கையில் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் அமரவைக்கப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து அறைக்குள் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தங்களை நிற்க வைத்து அவர்களை உட்கார வைத்திருக்கிறீர்கள் என அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார். இதன்பின் அதிமுக தரப்புக்கும் நாற்காலி போடப்பட்டு உட்காரவைக்கப்பட்டனர்.
இதையடுத்து, டோக்கன் வரிசைப்படி வேட்புமனுவை பெற வேண்டும் என தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அமைச்சர் சேகர்பாபு வலியுறுத்தினார். ஆனால், யார் முதலில் வந்தார்களோ அவர்களை முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. டோக்கன் வேட்பாளர்கள் பெயரில் இருந்ததன் அடிப்படையில் அனுமதிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி கூறினார். ஆனால், அதனை ஏற்க மறுத்து அமைச்சர் சேகர்பாபு வாக்குவாதம் செய்தார். இதனால் 2 மணி நேரங்களுக்கு மேலாக அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதன்பின் வருகைப் பதிவேடு பரிசோதிக்கப்பட்டது. அதன்படி அதிமுகவின் ராயபுரம் மனோ தரப்பு முதலில் வந்தது உறுதிசெய்யப்பட்டது. அவரையே முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதித்தார். அதுவரை, அமைச்சர் சேகர்பாபு, கலாநிதி வீராசாமி, சென்னை மேயர் பிரியா ஆகியோர் தனி அறையில் அமரவைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தின்போது இருதரப்பிலும் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்பு கடுமையான சொற்களால் வசைபாடிக் கொண்டனர். வெட்புமனு தாக்கலுக்குப் பிறகு இரு தரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டி ‘அவர்கள் மீதுதான் தவறு” என்று விவரித்தனர். இதனிடையே, அலுவலகத்துக்கு வெளியே தொண்டர்கள் கூடியதாலும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தேர்தல் நெருங்க நெருங்க தோல்வி பயத்தால், அதிமுகவினர் இப்படிப்பட்ட அராஜகங்களை கட்டவிழ்த்துவிடுவார்கள். எதிரிகள் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்தக் கூடும். எனவே, தேர்தலை அமைதியாக சந்திக்க வேண்டும். எங்கும் ஒரு சிறு சலசலப்புக்கு இடமளிக்கக் கூடாது என்ற தமிழக முதல்வரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ற வகையில், அமைதியான முறையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நாங்கள் முறையிட்டோம்” என்றார்.
அதேவேளையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது “திமுகவினர் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், முண்டியடித்துக்கொண்டு மரபைப் பின்பற்றாமல், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்து அங்கிருந்த இருக்கைகளைப் பிடித்துக் கொண்டனர். ஆளுங்கட்சி தங்களது அதிகாரத்தை முழுமையாக துஷ்பிரயோகம் செய்து தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அழுத்தம் கொடுத்து அவரை பணிய வைக்கப் பார்த்தனர்” என்றார்.
+ There are no comments
Add yours