மக்களவைத் தேர்தலையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று பிரச்சாரத்தை தொடங்கினார். திருச்சி அருகே சிறுகனூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியது: “திருச்சி என்றாலே திருப்புமுனைதான். இப்போது இந்தியாவுக்கே திருப்புமுனையை ஏற்படுத்த நாம் திரண்டிருக்கிறோம்.
பல திருப்புமுனைகளை நமது தமிழகத்துக்கு கொடுத்து, தனது வாழ்நாள் எல்லாம் உழைத்த மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நினைவுப் பரிசாக ஒரு மகத்தான வெற்றியை கொடுப்பதற்காக தொடக்கமாக நாம் திரண்டிருக்கிறோம். வெற்றி என்றால் எப்படிப்பட்ட வெற்றி நாற்பதுக்கு நாற்பது.
பாசிச பாஜகவை வீழ்த்தி இண்டியா கூட்டணியின் ஆட்சியை மத்தியில் ஏற்படுத்துவதற்காக நடப்பதுதான் இந்த மக்களவைத் தேர்தல். தேர்தல் என்பதால், பிரதமர் இப்போது இந்தியாவிலேயே இருக்கிறார். எனவேதான், அடிக்கடி தமிழகத்துக்கு வருகிறார். இல்லையென்றால் பெரும்பாலும் வெளிநாட்டில்தான் இருப்பார்.
சமீபத்தில் சேலத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழகத்தில் அவருக்கு செல்வாக்கு அதிகமாகி விட்டதால், திமுகவினருக்கு தூக்கம் வரவில்லை என்று பேசியிருக்கிறார். உண்மையாகவே, தன்னுடைய ஆட்சி முடியப்போகிறது என்பதால், பிரதமர் மோடிக்குதான் தூக்கம் வரவில்லை. அவருக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி பயம், அவருடைய கண்ணிலும் முகத்திலும் நன்றாகவேத் தெரிகிறது.
சரி, தமிழகத்துக்கு இத்தனை பிரதமர் வந்தாரே, அவரிடம் நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். அதற்கு ஒருமுறையாவது அவர் பதில் சொல்லியிருக்கிறாரா? தமிழகத்துக்கு வாரம்தோறும் வந்தபோதும் அவர் பதில் சொல்லவில்லை. இனிமேல் வந்தாலும் அவரால் பதில் சொல்ல முடியாது.
10 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரு பிரதமரால், தமிழகத்துக்கு செய்த சிறப்பு திட்டம் ஏதாவது ஒன்றை மட்டும் அவரால் சொல்ல முடியுமா? ஆனால், அவர் திமுகவை விமர்சிக்கிறார். இப்போது நான் சொல்கிறேன். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் மூன்றாண்டு காலம், மக்களாகிய உங்களுக்கு செய்த சாதனைகளின் பட்டியலை கூறவா? அதை சொன்னால், இன்றைக்கு ஒருநாள் போதாது” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
+ There are no comments
Add yours