மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 111 வேட்பாளர்கள் கொண்ட 5-வது பட்டியலை அக்கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
இந்தப் பட்டியலில் ராமாயண நடிகர் அருண் கோவில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடாவின் மருமகன் டாக்டர் சி.என்.மஞ்சுநாத், சந்தேஷ்காலி வன்முறையில் இருந்து தப்பிய ரேகா பத்ரா, தொழிலதிபர் நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தற்போதைய எம்.பி.க்களான வருண் காந்தி, வி.கே.சிங், அனந்தகுமார் ஹெக்டே உள்ளிட்ட 37 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
வருண் காந்தியின் பிலிபித் தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதா நிறுத்தப்பட்டுள்ளார். என்றாலும் வருண் காந்தியின் தாயார் மேனகா காந்தி, சுல்தான்பூரை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
வி.கே.சிங் 2 முறை எம்.பி.யான காஜிபாத்தில் அவருக்கு பதிலாக அதுல் கர்க் போட்டியிடுகிறார். அனந்தகுமார் ஹெக்டே 5 முறை எம்.பி.யான உத்தர கன்னடாவில் கர்நாடக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே கக்கேரி நிறுத்தப்பட்டுள்ளார்.
பிஹாரில் முசாபர்பூர் எம்.பி. அஜய் நிஷாத், சசாராம் எம்.பி. செடி பாஸ்வான், பக்சார் எம்.பி. (மத்திய அமைச்சர்) அஷ்வினி சவுபே ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதுபோல் ஒடிசாவில் மத்திய அமைச்சர் விஸ்வேஸ்வர் துடு உட்பட 4 எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மேற்கு வங்கத்தில் எஸ்.எஸ்.அலுவாலியா, குஜராத்தில் தர்ஷனா ஜர்தோஷ் உள்ளிட்ட எம்.பி.க்களுக்கும் பாஜக மீண்டும் வாய்ப்பு அளிக்கவில்லை.
பாஜக ஏற்கெனவே ஜெயந்த் சின்ஹா, சாத்வி பிரக்யா தாக்குர், ரமேஷ் பிதூரி ஆகிய எம்.பி.க்களுக்கு சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக வாய்ப்பு தரவில்லை. புதுடெல்லியில் மீனாட்சி லெகிக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜுக்கு பாஜக வாய்ப்பு அளித்துள்ளது
+ There are no comments
Add yours