நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயருக்கு உரிமைக் கோரி வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார். மேலும், இப்படி கூறியதால் தன்னை விஜய் ரசிகர்கள் கல்லால் அடிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, தனது கட்சியில் உறுப்பினராக சேர்வதற்கான செயலியை கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 8) அவர் வெளியிட்டார். இதில் இரண்டே நாட்களில் 50 லட்சம் பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கட்சிக்கு இரண்டே தினங்களில் இத்தனை உறுப்பினர்கள் சேர்வது பெரிய கட்சிகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை சில அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆங்கில சுருக்கமான TVK என்ற பெயர், தனது கட்சிக்குதான் சொந்தம் என்று கூறி தேர்தல் ஆணையத்திற்கு அவர் கடிதமும் எழுதி இருக்கிறார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வேல்முருகன், நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், “ஒரு கதாநாயகன் நேற்று கட்சியை ஆரம்பித்து உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். அந்தக் கட்சியின் பெயர் கூட எனக்கு தெரியவில்லை. இரண்டு நாட்களில் 50 லட்சம் பேர் அவரது கட்சியில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளார்களாம். அதனால் கூகுளே முடங்கிவிட்டதாக கூறுகிறார்கள். எப்படி இருக்கிறது பாருஙகள்.
இப்படி கூத்தாடிகளை கொண்டாடுகின்ற நிலையை தமிழகத்தில் நாம் உடைக்க வேண்டும். இவ்வாறு நான் பேசிவிட்டு செல்வதால், விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கக்கூடும். அவரகள் எல்லாம் ரசிகர்கள் என்பதால் அப்படி நடந்துகொள்ளக்கூடும்” என வேல்முருகன் பேசினார்.
+ There are no comments
Add yours