மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி கேட்டுள்ளோம். கேட்டுள்ள தொகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
திமுக உடனான முதல்கட்ட தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “2024 மக்களவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கான நியாயமான காரணங்களையும் எடுத்துவைத்துள்ளோம்.
கடந்த மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றியில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு நானும் பங்காற்றியுள்ளேன். சட்டமன்றத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் குரல் ஒலிப்பது போல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று எனது விருப்பத்தை தெரிவித்தேன். எனது கோரிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் கொண்டு செல்லவதாக திமுக தெரிவித்துள்ளது.
இந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் வலியுறுத்தினேன். நாங்கள் கேட்டிருக்கும் ஒரு தொகுதியை திமுக கொடுக்கும் என நம்புகிறோம். தமிழகத்தில் எங்கு போட்டியிட சொன்னாலும் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.
+ There are no comments
Add yours