மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து இன்று ஏழாம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் கமல்ஹாசன் பேசினார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன் தேர்தல் கூட்டணி மற்றும் விஜய்யின் அரசியல் வருகை உள்ளிட்டவை குறித்து பேசினார்.
அப்போது, “கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இறுதியானதும் நல்ல செய்தி சொல்கிறேன். சினிமாவை விட்டு முழுநேர அரசியலில் இறங்குவது விஜய்யின் இஷ்டம். அவர் செய்கிற அரசியல் அவர் பாணி. நான் செய்கிற சினிமா என் பாணி. அவரவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்துகொண்டிருக்கிறோம். விஜய்யுடன் ஏற்கனவே நான் பேசியிருக்கிறேன். அரசியலுக்கு வரவேண்டும் என்று விஜய் சொன்னதும் முதல் வரவேற்பு என்னுடையதாக தான் இருந்தது.
கட்சி தொடங்கிய இந்த ஆறு ஆண்டுகால பயணத்தில் நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டோம். எது செய்யக் கூடாது, எதை யாரும் செய்யாமல் மறந்துவிட்டார்கள் என்பதையும் கற்றுக்கொண்டோம். இந்த ஆறு ஆண்டுகளில் எந்த பத்திரத்திலும் கையெழுத்து போடவில்லை. யாரிடமும் காசு வாங்கவில்லை என்பதே எங்களின் சாதனை” என்று தெரிவித்தார்.
இண்டியா கூட்டணி உடன் இணைவது குறித்து கமல் பேசுகையில், “கட்சி அரசியலை மழுங்கடித்து தேசத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். தேசத்தைப் பற்றி சுயநலமில்லாமல் சிந்திக்கும் எவருடனும், எனது மக்கள் நீதி மய்யமும் துணை நிற்கும். ஆனால் நீங்கள் உள்ளூர் அரசியல் நடத்தினால், நாங்கள் அதில் ஒரு பகுதியாக இருக்க மாட்டோம். கோவை தெற்கு தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேனா என்பதை கூட்டணி பேசி முடித்துவிட்டு சொல்கிறேன்.” என்று கூறினார்.
+ There are no comments
Add yours