ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் முதல்வராவதற்கு அம்மாநில அமைச்சரும், நடிகையுமான ரோஜா திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை இன்று தரிசித்து வழிபட்டார்.
ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக உள்ளார். அம்மாநிலத்தில் தற்போது, மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைத் தேர்தலும் இணைந்து நடத்தப்படுகிறது.
இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசின் சுற்றுலா துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலிலிருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது ரோஜா கூறியதாவது:
“அண்ணாமலையாரை தரிசித்து அவரது ஆசியுடன் ஜனங்களுக்கு சேவை செய்ய நான் முன்னேறி செல்கிறேன். நேற்று கிரிவலம் சுற்றி வந்தோம். இன்று அருணாச்சலேஸ்வரரை தரிசித்துள்ளோம். மக்களை நேசிக்கும் எங்களின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி. அவர் இரண்டாம் முறையாக முதல்வராக வேண்டும் என மனப்பூர்வமாக வேண்டிக்கொள்கிறேன். அதேபோல் நான் 3வது முறையாக எம்எல்ஏ-வாக வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.
அதைத் தொடர்ந்து ஆந்திர தேர்தலில் அதிக அளவு வன்முறை நடந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரோஜா, “பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா கூட்டணி அமைத்துள்ளனர். சந்திரபாபு நாயுடு தேர்தலில் வெற்றி பெற பாஜகவுடன் இணைந்து அதிகாரத்தை பயன்படுத்துகிறார்.
கலெக்டர், தேர்தல் அலுவலர்கள் என அனைவரையும் பணியிட மாற்றம் செய்வது, அவர்கள் மீது விசாரணை அமைப்பது என மிகவும் பதற்றத்தை ஏற்படுத்தி விட்டனர். ஆனால் மக்கள் தெளிவாக உள்ளனர். தங்களுக்கு யார் நல்லது செய்தார்கள் என மக்களுக்கு தெளிவு இருந்து, எங்களுக்கு முழு ஆதரவு அளித்ததால் கண்டிப்பாக நாங்கள் தான் வெற்றி பெறுவோம்” என்றார்.
+ There are no comments
Add yours