வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் போட்டியிடுவது இல்லை என பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்க பாஜக முழு வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் அக்கட்சியின் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த ஒரு மாத காலமாகவே தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் பல்வேறு மாநிலங்களில் பயணம் செய்து கட்சியை வலுப்படுத்தியும், கூட்டணியை உறுதி செய்தும் வெற்றி வாய்ப்புக்கான ஆலோசனைகளை வழங்கியும் வருகிறார்கள். அத்துடன் பிரச்சாரக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.
இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த மாநிலங்களில் போட்டியிடாமல் அந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகாலயாவில் இரண்டு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த இரு இடங்களிலும் தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மணிப்பூரில் உள்ள இரண்டு தொகுதிகளில் ஒன்றில் நாகா மக்கள் முன்னணி கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் எனவும், நாகாலாந்தில் தேசியவாத குடியரசு முற்போக்கு கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் இந்த முடிவுக்கு அந்த மாநிலங்களில் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத ஒற்றுமை நீதி யாத்திரையால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஆதரவு கிடைத்திருப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours