மோடி வருகையையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிக்கு வீட்டுக்காவல்!

Spread the love

தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்பு பலூன்களைப் பறக்க விடப் போவதாக அறிவித்திருந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி ரஞ்சன் குமார் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு இன்று வருகிறார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா இன்று மாலை நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அத்துடன் தூத்துக்குடி செல்லும் பிரதமர் மோடி நாளை நடைபெறும் அரசு விழா மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்நிலையில் பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ராமேஸ்வரத்தில் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், பாஜக அரசைக் கண்டித்தும் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. அது தவிர பிரதமர் வருகையின்போது கருப்பு பலூன்கள் பறக்க விடுவோம் என மாநில எஸ்.சி, எஸ்.டி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் அறிவித்திருந்தார்.

‘தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மோடி அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. நிதிப்பகிர்விலிருந்து பேரிடர் நிவாரணம் வரை துரோகத்தை மட்டுமே ஒன்றிய பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், எந்த முகத்தை வைத்துக் கொண்டு தமிழகத்துக்கு மோடி வருகிறார்?. அனைத்துத் தரப்பினரும் 10 ஆண்டு மோடி ஆட்சியில் பெரும் துயரை அடைந்துள்ளனர். எனவே, தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்த மோடி, தமிழ் மண்ணில் கால் பதிக்க எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்தப்படும்’ என்று அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் அவரது வீட்டுக்குச் சென்ற தமிழக போலீஸ் அதிகாரிகள், பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன்கள் பறக்க விடப்படும் என போராட்டம் அறிவித்திருப்பதால் அவரை வீட்டுக் காவலில் வைப்பதாக அவரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது வீட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் போலீஸ் அதிகாரிகள் காவலில் ஈடுபட்டுள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours