ஊழலாவது, லஞ்சமாவது:
அரசியல் என்ற பொது வாழ்வு தூய்மையாகவும், ஒழுக்கமானதாகவும் இருக்க வேண்டும் என்ற கோட்பாடு மறைந்து போன நிலையில், அரசியல் ஒரு வியாபாரமாக மாறி போனதற்கு அடையாளமான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
எல்லோரும் அரசியலுக்கு வந்து தான் ஊழல் செய்வார்கள் என்று கூறுவது உண்டு. ஆனால், ஊழல் புரிவதுதான் அரசியல் வாதி ஆவதற்கான அடிப்படை தகுதி என்பது போல் தற்போது நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.
இதில் அனைத்து கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி விட்டு பாஜக தான் முதலிடத்தில் சிக்ஸர்களை அடித்து வருகிறது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானா எதிர்கட்சிகளை சேர்ந்த சுமார் 25 தலைவர்களுக்கு பாஜக சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து அடைக்கலம் தந்துள்ளது அம்பலமாகியுள்ளது. ஏற்கனவே, மத்திய புலனாய்வு துறை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகளை ஒன்றிய அரசு தனது கைப்பாவையாக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகள் வலுத்துவரும் நிலையில் தற்போது இந்த வாஷிங் மெஷின் அரசியல் என்ற பூதமும் கிளம்பியுள்ளது.
ஊழல் வழக்குகளில் சிக்கி சமீப காலங்களில் பாஜகவில் இணைந்த 25 பேரின் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிக்கார்ஜீன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். இவர்கள் மீதான ஊழல் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதன் மூலம், விசாரணை அமைப்புகளை பாஜக தனது அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவது அம்பலமாகி இருப்பதாகவும் கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர்கள் மீதான விசாரணை அமைப்புகளின் வழக்குகள் குறித்த புலனாய்வு அறிக்கையை நாளேடு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில், ஊழல் வழக்குகளில் சிக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர்.பாஜகவில் ஐக்கியமானப் பின் இவர்களில் 3 பேர் மீதான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும் 20 பேருக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஏதுமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான 6 அரசியல் வாதிகள் பாஜகவில் இணைந்துள்ளனர். ஊழல் வழக்குகளுக்கு பயந்து அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 10 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
இதேபோல், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனாவில் இருந்து தலா 4 பேரும், திரிணாமுல் காங்கிரசிலிருந்து 3 பேரும் பாஜகவில் சேர்ந்துள்ளனர். தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து 2 பேரும், சமாஜ்வாதி, ஜெகன் மோகன் கட்சியிலிருந்து ஒருவரும் விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.
பாஜகவில் சேர்ந்ததால் ஆதாயமடைந்த 25 பேரில் அஜித் பவார், பிரபுல் பட்டேல் உள்ளிட்ட 12 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று அந்த நாளிதழின் புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிக்கார்ஜீன கார்கே, விசாரணை அமைப்புகளை தனது அரசியல் ஆயுதங்களாக பாஜக பயன்படுத்தி வருவது இதன் மூலம் அம்பலமாகி இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். ஊழல் கறை படிந்தவர்கள் பாஜகவில் இணைந்தவுடன் புனிதர்களாக மாறி விடுகிறார்கள்.
ஊழல் கறையை பாஜக எனும் வாஷிங் மிஷின் மூலம் அகற்றி அவர்கள் சுத்தமானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.பிரதமர் நரேந்திரமோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இணைந்து செய்யும் இந்த வாஷிங் மிஷின் அரசியல் நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு சாபமாக மாறியுள்ளது என்றும் கார்கே தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி நிறுவனங்கள் மீதும் சோதனைகள் நடத்தப்படுகின்றன என்றும், சோதனைக்கு ஆளான நிறுவனங்கள் பிற்காலத்தில் பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளன என்றும் கார்கே புகார் தெரிவித்துள்ளார். இது தேர்தல் பத்திர ஊழல் வழக்குகளில் அம்பலமாகியுள்ளது என்றும், கார்கே குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கட்சிகளை மட்டுமே குறிவைத்து பாஜக இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.பாஜகவின் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு மேலும் ஒரு உதாரணமாக இன்றும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லி அரசின் சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பட்டியலினத்தோருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி செயல்படுவதாகவும், முதல்வர் கெஜ்ரிவால் ஊழல் செய்து விட்டார் என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், ராஜ்குமார் ஆனந்த் வீட்டில் கடந்த நவம்பரில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours