சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஆறு தளங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர். 10-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான கட்டிடத்தில் அங்குள்ள ஜவுளித்துறையில் வேலை செய்யும் பல்வேறு புலம் பெயர் தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கின்றனர். அந்தக் கட்டிடம் தரம் குறைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. கட்டிடத்தில் இருந்து ஏழு பேர் மீட்கப்பட்டனர் என்று கூறப்படும் நிலையில் இடிபாடுகளில் இன்னும் எத்தனை பேர் சிக்கியிருக்கிறார்கள் என்பது தெரிவியவில்லை.
இதுகுறித்து சூரத் இணை ஆணையர் (மண்டலம் 6) ராஜேஷ் பார்மர் கூறும்போது, “இடிபாடுகளில் இருந்து ஏழு உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட பெண் 23 வயதான காஷிஷ் சர்மா என்பது தெரியவந்திருக்கிறது. நியூ சிவில் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர் நிலைமை சீராக உள்ளது.
இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சிக்கியிருப்பவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை.
இந்தக் கட்டிடம் கடந்த 2016 – 17 ம் ஆண்டில் கட்டப்பட்டது என்றும், அருகில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் கட்டிடத்தின் 5 மாடிகளில் குடியிருந்தனர் என்றும் சூரத் காவல் கண்காணிப்பாளர் அனுபம் சிங் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours