ஜோதிடப் பழமொழிகள்… சில தவறான பழமொழிகளின் சரியான விளக்கங்கள் !

Spread the love

ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்கள்  நம்பிக்கை இல்லாதவர்கள்  என எல்லோரையும் ஜோதிடப் பழமொழிகள் சென்று சேர்ந்து விட்டன. அப்படி சேர்ந்து விட்டதோடு, அரைகுறையாக ஜோதிடம் அறிந்தவர்களும் ‘பரணி தரணி ஆளும்’,  ‘மகம் ஜகம் ஆளும்’ என்று சொல்வதை நாம் அடிக்கடி கேட்கலாம். இப்படி பாஸிட்டிவாக சொன்னால் கூட பரவாயில்லை.

ஆனால், ‘ரோகிணி நட்சத்திரம் தாய் மாமனுக்கு ஆகாது’ ஆண்மூலம் அரசாளும் பெண்மூலம் நிர்மூலம், என்று அவரவர் சவுகரியத்துக்கு அடித்து விடுவதைக் கேட்கிறோம் ஆனால் இவை யாவும் உண்மை அல்ல.  இங்கே சில தவறான பழமொழிகளின் சரியான விளக்கங்களைப் பார்ப்போம். 

‘ரோகிணி தாய் மாமனுக்கு ஆகாது! என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. ஜாதகத்தில் புதன் பலவீனமாக இருந்து, ஐந்தாம் வீட்டுக்குரிய கிரகமும் பாவ கிரகங்களுடன் சம்பந்தப்பட்டிருந்தால் மட்டுமே தாய் மாமனுக்கு ஆகாது. ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணர் பிறந்து கம்சனை அழித்ததால் இந்தப் பழமொழி ஏற்பட்டது. இது எல்லோருக்கும் பொருந்தாது. இந்த அமைப்பு எங்கோ ஒருசிலருக்குத்தான் இப்படி ஏற்படும். பொத்தாம் பொதுவாக இப்படி சொல்லக்கூடாது.

 உண்மையில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் ஒரு கூட்டத்திலேயே இருப்பார்கள். சமூகத்தில் இருக்கும் எல்லோராலும் விரும்பப்படுபவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய பேரும், புகழும் வீட்டுக்குப் பயனளிப்பதைவிட பொதுநல சேவைக்கு அதிகம் பயனுள்ளதாக இருக்கும். உதவி கேட்டு வரும் சொந்தம், நட்பு அனைவருக்கும் முகம் சுளிக்காமல் உதவிகளைச் செய்வார்கள். எப்போதும் இளமையாகக் காட்சியளிப்பார்கள்.  இவர்கள் முகத்தைப் பார்த்தோ உடல் வாகைப் பார்த்தோ யாராலும் வயதை கணிக்க முடியாது. அந்த அளவுக்கு உடல்நலத்தில் கவனம் செலுத்துவார்கள்.

‘ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்’ என்று ஒரு பழமொழி உண்டு. நம் அனுபவத்தில் நாம் ஆராய்ந்து பார்த்ததில், இதில் சிறிதும்  உண்மை இல்லை. இது பெண்கள் மீது சுமந்தப்பட்ட ‘பழிமொழி’யாகும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் மாமனாருக்கு ஆகாது என்பதிலும் எந்த உண்மையும் இல்லை.

அதாவது ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்து சந்திரனை குரு பகவான் பார்க்க, நல்ல தசா புக்தி கூடி வரும் காலத்தில் பிறந்தால் அரசாளும் யோகம் உண்டு. மூல நட்சத்திரம் 4 – ம் பாதத்தில் பிறந்தால் சத்துருக்களை வெற்றிகொள்ளும் சாமர்த்தியம் இருக்கும்.
எனவே, மாமனாருக்கு ஆகாது என்று எண்ணி, மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களை ஒதுக்க வேண்டாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் புகுந்த வீட்டில் மாமனார், மாமியாருடன் ஒற்றுமையாக வாழ்வதையும், மாமனார் நீண்ட ஆயுளுடன் இருப்பதையும் கண்கூடாக அநேக குடும்பங்களில் காணலாம்.

‘பூராடத்தில் நூலாடாது’ என்றொரு சொல்வழக்கு இருக்கிறது. இதைத் தவறாக அர்த்தம் செய்துகொண்டு, பூராட நட்சத்திரத்தில் பெண் பிறந்தால், அவளுக்கு மாங்கல்ய பலம் இருக்காது என்று ஒரு சிலர் கூறுவது வழக்கம். ஆனால், இதன் உட்பொருளே வேறு. நூல் என்பதைப் பாடப் புத்தகம் என்று அர்த்தம் கொள்ளவேண்டும். அதாவது கல்வியில் ஆரம்பத்தில் அலட்சியமாக இருப்பார்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும், ஆரம்பத்தில் மட்டும்தான். போகப்போக கல்லூரிக் கல்வியில் முதன்மையாக இருப்பார்கள்.

பலருக்கு, குடும்பச் சூழ்நிலை காரணமாகவோ உடல் நிலை காரணமாகவோ கல்வி தடைப்பட்டு, பின்னர் நல்ல விதமாக கல்வி அமையும். சிலர் இளங்கலையில் ஒரு பாடப்பிரிவிலும் முதுகலையில் மற்றொரு பாடப்பிரிவிலும் தேர்ச்சி பெறுவார்கள். படிப்பில் ஏற்படும் இந்தக் குழப்பத்தைத்தான், ‘பூராடத்தில் நூலாடாது’ என்று கூறியிருக்கிறார்களே தவிர,திருமணவாழ்க்கைக்கும் இந்தப் பழமொழிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. 


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours